Last Updated : 21 Jan, 2021 01:11 PM

1  

Published : 21 Jan 2021 01:11 PM
Last Updated : 21 Jan 2021 01:11 PM

ராகுல்காந்தி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவையில் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி

ராகுல்காந்தி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவை மேற்கு மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைவர் கூறினார்.

கோவை கோபாலபுரம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் இன்று (21-ம் தேதி) கூறியதாவது :

”அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவை மேற்கு மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அனைத்து துறைகளிலும் தமிழகத்தை சீரழித்த அதிமுக ஆட்சியை மாற்றுவது, மதச்சார்பற்ற கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு ராகுல்காந்தி பரப்புரை செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் ராகுல்காந்தி 5 முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பாஜக - அதிமுக கூட்டணியை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த ராகுல்காந்தி தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய ஊழல் ஆட்சி இதுவரை நடைபெற்றது இல்லை.

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிளை கூட்டணி கட்சிகளுக்கு தரக்கூடாது என்ற உதயநிதி ஸ்டாலின் கருத்து கூறினால், வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் என்ன செய்வது? கூட்டணியில் எல்லோரும் பகிர்ந்து கொள்வது தான் சிறப்பு. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கொள்கை ரீதியில் வெவ்வேறு வேறுபாடுகள் உள்ளன.

மதச்சார்பின்மை என்ற ஒற்றை நேர்கோட்டில் நாங்கள் கூட்டணியில் இணைந்துள்ளோம். எங்களது கூட்டாணியில் உள்ள இதுபோன்ற சிறு சிறு பிரச்சனை பேசி தீர்த்துக் கொள்வோம்.

கமல்ஹாசன் தனித்து நின்றால் பாஜகவிற்கு சாதகமாக இருக்கும் கமல்ஹாசனை 'பீ'’ டீம் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

வெற்றி வாய்ப்பு மற்றும் சூழலுக்கு ஏற்ப காங்கிரஸ் தொகுதிகளை கேட்கும். அதிமுக கதிகலங்கி நிற்கிறது.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என பாஜக முடிவு செய்வது கொடுமையானது. சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.

ஒபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக விளம்பரம் தருகின்றனர். ஒரே கட்சியில் இருவர் விளம்பரம் தருவது இதுவரை அதிமுகவில் இல்லை. மூன்றாவது அணியை நாங்கள் விரும்பவில்லை. அது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.

கமல்ஹாசனால் எங்களது கூட்டணி வாக்கு வங்கி பாதிக்க கூடாது என நினைக்கிறோம். மக்கள் நீதி மய்யம் கட்சி. கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. 7 பேர் விடுதலை செய்யப்பட்டால் அதை காங்கிரஸ் எதிர்க்கவும் செய்யாது. ஆதரிக்கவும் செய்யாது. நீதிமன்றம் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுதலை செய்யலாம். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்துவதை ஏற்க முடியாது.

ஹைதராபாத் எம்.பி. ஒவைசியின் வியாபாரம் தமிழ்நாட்டில் எடுபடாது. கட்சத்தீவை மீட்டால் வரவேற்போம்” இவ்வாறு அவர் கூறினார்.

திருநாவுக்கரசர் எம்.பி, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x