Published : 21 Jan 2021 12:41 PM
Last Updated : 21 Jan 2021 12:41 PM
இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் காணாமல் போன 4 தமிழக மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு இலங்கை அரசை கண்டிப்பதோடு, இது தொடர்பாக விசாரணை நடைபெற்று உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“தமிழக மீனவர்கள் இருவர் இலங்கை கடற்பகுதியில் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது, வருத்தத்துக்குரியது. கடந்த 18-ம் தேதி தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டு விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.
இந்த தாக்குதலில் மீனவர்கள் காயமடைந்ததும், மீன்பிடிச்சாதனங்கள் சேதப்படுத்தப்பட்டதும் மீனவர்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அது மட்டுமல்ல ஒரு படகில் சென்ற 4 மீனவர்களின் படகை முழ்கியடித்ததால் அந்த 4 பேரும் கடலில் முழ்கி காணாமல் போய்விட்டார்கள். இவர்களை தேடுவதற்காக சென்ற கோட்டைப்பட்டினம் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் மீனவர்கள் கிடைத்துவிடுவார்கள் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்.
ஆனால் இரண்டு நாள் சென்ற பிறகு நேற்று இலங்கை கடற்பகுதியில் இரண்டு தமிழக மீனவர்கள் உயிரிழந்ததாக இலங்கை பத்திரிக்கைச் செய்தி தெரிவிக்கிறது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு இலங்கை கடற்படையினர் தான் காரணமாக இருப்பார்கள் என்ற சந்தேகம் மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே இந்திய அரசு இலங்கை அரசிடம் இலங்கை கடற்படையின் அராஜகத்தை விரிவாக எடுத்துக்கூறி மீனவர்களின் உயிரிழப்புக்கு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.
இந்திய அரசு - உயிரிழந்த தமிழக மீனவர்களின் இழப்புக்கும், மூழ்கடிக்கப்பட்ட படகுக்கும் அதிகபட்ச இழப்பீட்டுத்தொகையை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும். இது போன்ற ஒரு சம்பவம் இனியும் நடைபெறாமல் இருக்க இந்திய அரசு இலங்கை அரசிடம் உத்திரவாதாம் பெற வேண்டும்.
குறிப்பாக இந்திய அரசு தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலுக்கு இலங்கை கடற்படையினரால் இனிமேலும் எப்பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதிதீவிர நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்த தமிழக மீனவர்களின் குடும்பத்துக்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண தமாகா என்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்”.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT