Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்: வீரர்கள், பார்வையாளர்கள் உட்பட 42 பேர் காயம்

ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்ற அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார், திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மநீம மாநிலச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர்.படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு நேற்று உற்சாகமாக நடைபெற்றது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள், வீட்டுமனைகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 42 பேர் காயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு தொடர் மழை காரணமாக மாட்டுப் பொங்கல் அன்று(ஜன.15) ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

திருச்சி கோட்டாட்சியர் என்.விசுவநாதன் தலைமையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் ஜல்லிக் கட்டை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட் டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க ஒரு சுற்றுக்கு தலா 75 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டில் 589 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 369 பேர் கலந்து கொண்டனர். காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் 8 பேர், பார்வை யாளர்கள் 18 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 16 பேர் என 42 பேர் காயமடைந்தனர். இவர்களில் 4 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சிவா அதிக காளைகளை அடக்கி முதல் பரிசாக மோட்டார் சைக்கிளையும், அரியலூரைச் சேர்ந்த ஜெனித் 2-ம் பரிசாக வீட்டுமனையையும் பெற்றனர்.

மேலும், காளைகளை அடக்கிய எஞ்சிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமை யாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்ட எஸ்.பி(பொ) செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட் டனர். திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் முருகானந்தம் மற்றும் திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x