Published : 20 Jan 2021 08:56 PM
Last Updated : 20 Jan 2021 08:56 PM

ரம்மியில் பணம் வைத்து சூதாடுவதை வியாபாரமாகக் கருத முடியாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் 

சென்னை

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்த ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சிறார்கள் இருவர், தங்கள் பெற்றோரின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர் எனத் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பணம் வைத்து விளையாடுவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தை வர்த்தகமாகக் கருத முடியாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தது. இந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தன.

இந்த வழக்குகளுக்குப் பதிலளித்து தமிழக அரசு சார்பில் உள்துறை துணைச் செயலாளர் உதயபாஸ்கர் தாக்கல் செய்த பதில் மனுவில், “தெலங்கானா மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதைப் போல, தமிழகத்திலும் சட்டம் இயற்றுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த ஆலோசனையை ஏற்று இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்த ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சிறார்கள் இருவர், தங்கள் பெற்றோரின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.

அதனால் பெற்றோருக்கு ஏற்படும் பண இழப்பைத் தடுக்கவும், தற்கொலைகளைத் தடுக்கவுமே இந்த அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ரம்மி விளையாட்டு திறமைக்கானது என்றாலும், பந்தயம் வைத்து விளையாடினால் அது குற்றமாகும். பணம் வைத்து விளையாடுவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தை வர்த்தகமாகக் கருத முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் தாமதமாகப் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதற்கு விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என எதிர்த்தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x