Published : 20 Jan 2021 06:43 PM
Last Updated : 20 Jan 2021 06:43 PM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் பல கி.மீ., சென்று கிராம மக்கள் வாக்களிக்கும் நிலை உள்ளதால், அதை மாற்ற வேண்டுமென ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டியிடம் எம்எல்ஏ நாகராஜன் புகார் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி வெளியிட்டார்.
தேர்தல் பார்வையாளர் ஆப்ரஹாம், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன், சுரேந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மானாமதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ நாகராஜன் பேசுகையில், ‘‘ மானாமதுரை தொகுதியில் சில கிராம மக்கள் வாக்களிக்க பல கி.மீ., வரை செல்ல வேண்டியுள்ளது. அவர்களுக்கு அருகிலேயே வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்,’’ என்று கூறினார்.
தொடர்ந்து மற்ற அரசியல் கட்சியினர் பேசுகையில், ‘புதிய வாக்காளர்களுக்கு இதுவரை அடையாள அட்டை கிடைக்கவில்லை. மனு கொடுத்தும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கவில்லை. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் முகவரி மாறி, மாறி அச்சிட்டுள்ளனர்,’ என்று தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
புதிய வாக்காளர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்படும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு முகவரி மாறியது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வர். இரண்டு கி.மீ.,க்கு அப்பால் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நவ.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதற்கு பிறகு புதிய வாக்காளர்களாக 38,286 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் இறந்தவர்கள், இரட்டை பதிவு என 14,482 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த முறை 80-வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தனி அடையாளம் தர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இறுதிப்பட்டியல் வெளியிட்டாலும் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடக்கும்.
மாவட்டத்தில் 1,348 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை 2-ஆக பிரிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளோம், என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT