Published : 20 Jan 2021 05:34 PM
Last Updated : 20 Jan 2021 05:34 PM
பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுப்பதென்றால் ஸ்டாலினுக்குக் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும். வேண்டுமென்றே திட்டமிட்டு அரசின் மீதும், கட்சியின் மீதும் குறை சொல்வதை ஸ்டாலின் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். வேண்டுமென்றே, திட்டமிட்டு இந்த ஆட்சி உடையும், இந்த ஆட்சி கவிழும் என்று சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
“எடப்பாடி பழனிசாமி எப்போது பார்த்தாலும் விவசாயி, விவசாயி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று ஸ்டாலின் சொல்கிறார். விவசாயி, தன்னை விவசாயி என்றுதான் சொல்ல முடியும். வியாபாரி, தன்னை வியாபாரி என்றுதான் சொல்லுவார். வேறு என்ன சொல்ல முடியும் என்று ஸ்டாலின்தான் சொல்ல வேண்டும். இவருக்கு எந்தத் தொழிலும் இல்லை. அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். நீங்கள் உழைத்து வந்தால் பரவாயில்லை. மக்களின் உழைப்பை நம்பித்தானே இருக்கிறீர்கள்.
ஸ்டாலின் சொல்கிறார், எவ்வளவு நீங்கள் குட்டிக்கரணம் போட்டாலும் ஜெயிக்க முடியாதாம். ஜெயிப்பதற்கும், குட்டிக்கரணம் போடுவதற்கும் என்ன சம்பந்தம். மக்களைச் சந்தித்து நாங்கள் என்னென்ன செய்தோம், என்னென்ன செய்யப் போகிறோம் என்று சொல்லி ஓட்டுக் கேட்கிறோம். ஆனால், குட்டிக்கரணம் யார் போடுவார்கள் என்று மக்களுக்கு தெரியும். ஆகவே இன்றைக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு அரசின் மீதும், கட்சியின் மீதும் குறை சொல்வதை ஸ்டாலின் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
ஸ்டாலினால் எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை. எனவே, வேண்டுமென்றே, திட்டமிட்டு இந்த ஆட்சி உடையும், இந்த ஆட்சி கவிழும் என்று சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். நீங்கள் கனவு காணாதீர்கள். எப்போதும் உங்கள் கனவு மட்டும் நிஜமாகாது என்பதை மட்டும் இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்போதும் நீட் தேர்வைப் பற்றி ஸ்டாலின் பேசுகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கின்றபோது, திமுக அங்கம் வகித்து அமைச்சரவையில் இடம் பெற்றபோது, 2010-ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுப்பதென்றால் ஸ்டாலினுக்குக் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்.
நீட் தேர்வை நிறுத்துவதற்காகப் போராடியது திமுக அரசு. அதிமுக ஆட்சியில் ஊழல் என்று சொல்கிறார். எந்த இடத்திற்கும் வாருங்கள், ஆனால், துண்டுச் சீட்டு இல்லாமல் வரவேண்டும். யாராவது எழுதிக் கொடுத்ததைப் படிக்கக் கூடாது. எந்தத் துறையில் என்னென்ன என்று சொல்லுங்கள், நான் பதில் சொல்கிறேன். அதற்குத் தயாராக இல்லை. ஆனால், வழக்கை வாபஸ் வாங்கு என்கிறார். வழக்கிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். நீங்கள்தானே புகார் கொடுத்தீர்கள்.
அந்தப் புகாரில் என்னென்ன குற்றச்சாட்டு இருக்கிறதோ அதற்கு நான் பதில் சொல்கிறேன். ஆனால் வரமாட்டேன் என்கிறார். ஆளுநரிடம் பொய்யான அறிக்கை தயார் செய்து கொடுத்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாலை டெண்டர் ஒன்றை திருநெல்வேலியில் கேன்சல் செய்துவிட்டார்கள். அதுகூட தெரியாமல், அதில் 700 கோடி ரூபாய் ஊழல் என்று சொல்லி எதிர்க்கட்சித் தலைவர், திமுகவின் தலைவர் பொய் அறிக்கை கொடுத்துள்ளார். படித்துப் பார்த்தால்தானே தெரியும், நாட்டைப் பற்றியே தெரியாத ஒரு தலைவர் திமுக தலைவர்.
அப்படியானால் எவ்வளவு எரிச்சலுடன் அவர் உள்ளார் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் கோரப் பசியில் இருக்கிறார். சிறிது ஏமாந்தாலும் மக்களையே சாப்பிட்டுவிடுவார். எப்போதும் முதல்வர், முதல்வர் என்று ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிறார். முதல்வர் பதவியை மக்கள் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். நான் வேண்டாமென்று சொல்லவில்லை”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT