Published : 20 Jan 2021 04:47 PM
Last Updated : 20 Jan 2021 04:47 PM

நான் குறுக்கு வழியில் முதல்வர் ஆனேன் என்றால் 1969-ல் உங்கள் தந்தை எப்படி முதல்வர் ஆனார்?- ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி கேள்வி

காஞ்சிபுரம்

நான் குறுக்குவழியில் முதல்வரானேன் என்றால் உங்கள் தந்தை கருணாநிதியும் நேரடியாக முதல்வராக ஆகவில்லை. மக்கள் அண்ணாவுக்கு தான் ஒட்டு போட்டார்கள், கருணாநிதிக்கு அல்ல, ஸ்டாலினின் தந்தை எப்படி முதல்வர் ஆனாரே அதேபோல் தான் நானும் முதல்வர் ஆனேன் என முதல்வர் பழனிசாமி பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும். நீங்கள் கனவை மட்டும் காணலாம். நிச்சயம் நடக்காது. ஸ்டாலினால் கனவை மட்டுமே காண முடியும். இதே போலத் தான் நான் முதல்வராக பதவியேற்றப் போதும் கனவு கண்டார். இந்த ஆட்சி 10 நாட்களில், ஒரு மாதத்தில் கவிழ்ந்து விடும் என்று. ஆனால் தற்போது நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

அதேபோல் தான் இப்போதும் நீங்கள் காணுகின்ற கனவு, எண்ணம் ஒரு நாளும் நிறைவேறாது. மீண்டும் அம்மாவுடைய ஆட்சி தான் தமிழகத்திலே மலரும். மக்களின் ஆதரவோடு தொடர்ந்து அதிமுக அரசு ஆட்சி அமைக்கும்.

ஸ்டாலின் போகும் இடமெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு எங்கள் ஆட்சியின் மீது பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். ஸ்டாலின் ஒரு திண்ணையில் பெட்ஷீட் போட்டு உட்கார்ந்து கொண்டு, மக்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது ஏன் செய்யவில்லை. நீங்கள் துணை முதல்வராக இருந்தீர்கள், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தீர்கள் அப்போது ஏன் மக்களை சந்தித்து கேள்வி கேட்கவில்லை.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் திட்டில் பெட்ஷீட் போட்டு உட்கார்ந்து கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்றாரே, அந்த கோரிக்கைகள் எல்லாம் என்னவாயிற்று என்பது தான் என்னுடைய கேள்வி. அப்பொழுது மக்களை ஏமாற்றி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றீர்கள். இப்போதும் மக்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள். பதவியில் வந்துவிட்டால், குடும்பம் தான் கண்ணுக்கு தெரியும். மக்கள் கண்ணுக்கு தெரிய மாட்டார்கள். தன் வீட்டு மக்கள் தான் கண்ணுக்கு தெரிவார்கள்.

ஆகவே அண்ணா திமுக அரசு தான் நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை செயல்படுத்தும் அரசு. எடப்பாடி பழனிசாமி நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என்று சொல்கிறார். உண்மை தான். நான் இல்லை என்று சொன்னால் தானே மறுப்பு தெரிவிக்க வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முதல்வரை தேர்ந்தெடுக்க முடியும். பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் எந்த கட்சிக்கு கிடைக்கிறதோ அந்த கட்சி தான் சட்டமன்றக் கட்சி தலைவரை தேர்ந்தெடுத்து முதல்வராக முடியும். நேரடியாக யாரும் மக்கள் ஒட்டு போட்டு முதல்வர் ஆக முடியாது என்பதை ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அதுதான் நம்முடைய சட்டமுறை.

அண்ணா பிறந்த மாவட்டம் இந்த காஞ்சிபுரம் மாவட்டம். அண்ணா தனது உழைப்பால் முதல்வராகி துரதிஷ்டவசமாக மறைந்து விட்டார். அப்பொழுது கருணாநிதி சூழ்ச்சி செய்து முதல்வராக வந்தார். அவர் நேரடியாக முதல்வராக ஆகவில்லை. மக்கள் அண்ணாவுக்கு தான் ஒட்டு போட்டார்கள். தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி அண்ணாவுக்கு இருக்கிறது என்பதால் தான் மக்கள் அவர் முதல்வராக வேண்டும் என்று வாக்களித்தார்கள்.

கருணாநிதிக்கு அல்ல. இவருடைய தந்தை எப்படி முதல்வர் ஆனாரே அதேபோல் தான் எடப்பாடி பழனிசாமியும் முதல்வர் ஆனார். நான் ஊர்ந்து ஊர்ந்து வந்து முதல்வர் ஆனேன் என்று ஸ்டாலின் சொல்கிறார். அவருடைய அப்பா எட்டிக்குதித்து வந்தா முதல்வர் ஆனார். கவிஞர் கண்ணதாசன் தனது சுயசரிதையில் கருணாநிதி எப்படி ரெயிலில் வந்தார் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார். நான் அப்படி வரவில்லை.

நான் விவசாய குடும்பத்திலே பிறந்தவன். இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றேன். ஆகவே, நான் வந்த வழி நேர்வழி. நீங்கள் வந்த வழி குறுக்கு வழி. அதனால் தான் உங்களுக்கு குறுக்கு புத்தி இருக்கிறது. கட்சியை உடைக்க வேண்டும் என்கிறார், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிறார். நேரடியாக மக்களை சந்தித்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னென்ன செய்வோம் என்று சொல்லி வாக்குகளை கேட்டால் பரவாயில்லை.

நாங்கள் மக்களை சந்திக்கிறோம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மக்களை சந்திக்கின்ற போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதைஇதையெல்லாம் செய்வோம் என்று சொன்னார்கள். மக்கள் வாக்களித்தார்கள், முதல்வர் ஆனார்கள், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினார்கள். அதேபோல நாங்களும் மக்களை சந்திக்கின்றோம். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று சொல்கின்றோம், தொடர்ந்து எங்களுக்கு நல்வாய்ப்பை தாருங்கள் என்று கேட்கின்றோம்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x