Published : 20 Jan 2021 03:12 PM
Last Updated : 20 Jan 2021 03:12 PM

பாலிடெக்னிக் கல்வி: பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை

அரசு பாலிடெக்னிக்குகளில் இலவசக் கல்வி வழங்கப்படும் நிலையில், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முதல் தலைமுறை மாணவர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து உதவித்தொகைகளையும் வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது முகநூலில் வெளியிட்ட பதிவு வருமாறு:

“தமிழ்நாட்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும், ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மட்டும் இந்த உதவித் தொகை வழங்கப்படவில்லை. தொழில்நுட்பக் கல்வியில் ஒரு பிரிவினருக்கு வழங்கப்படும் உதவித் தொகை இன்னொரு பிரிவினருக்கு மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல.

தமிழ்நாட்டில் அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் படிப்புகளில் குறிப்பிடத்தக்கது பாலிடெக்னிக் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் பொறியியல் பட்டயப் படிப்புகள் தான். ஒரு காலத்தில் இந்தப் படிப்புகளைப் படிக்க கடுமையான போட்டி நிலவியது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை மாறி விட்டது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2013-ம் ஆண்டுக்கு முன்பாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சமாக இருந்தது. ஆனால், இப்போது இது 50 ஆயிரமாக குறைந்துவிட்டது.

இதற்கான காரணங்களில் மிகவும் முக்கியமானது சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டது தான். தொழில்நுட்பப் பட்டப்படிப்பு வழங்கும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரமும், ஐ.டி.ஐ. பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

இதனால் பெரும்பான்மையான மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளிலும், ஐடிஐக்களிலும் சேர்ந்து விடுகின்றனர். பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்ததற்கு இது தான் காரணம் ஆகும். இந்த நிலை மாற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

உலகம் முழுவதும் நான்காம் தொழிற்புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதை செயல்படுத்த பட்டயப் படிப்பு படித்த தொழில்நுட்பப் பணியாளர்கள் மிக அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றனர். ஆனால், இப்போது பாலிடெக்னிக்குகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே படிப்பை முடித்து விட்டு வெளியில் வருகின்றனர். இது தேவையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு.

தமிழ்நாட்டில் 51 அரசு பாலிடெக்னிக்குகள், 34 அரசு உதவிபெறும் பாலிடெக்னிக்குகள், 416 சுயநிதி பாலிடெக்னிக்குகள், 4 இணைப்பு பாலிடெக்னிக்குகள் என மொத்தம் 501 பாலிடெக்னிக்குகள் உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் கூடுதலான இடங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்கள் மட்டும் தான் நிரம்புகின்றன. ஒரு பாலிடெக்னிக்கில் 100 பேர் மட்டுமே பயில்கின்றனர். இது மனிதவளத்தை வீணடிக்கும் செயலாகும்.

பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால், பொறியியல் பட்டப்படிப்புகளில் ஒப்பீட்டளவில் அதிக மாணவர்கள் சேருகின்றனர். அதேநேரத்தில், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் போதிலும், அதிக மாணவர்கள் சேருவதில்லை. இதற்குக் காரணம் ஏற்கனவே கூறியதைப் போன்று பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களில் முதல் பட்டதாரி மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு எந்தவித உதவித் தொகையும் வழங்கப்படாதது தான். பாலிடெக்னிக் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலம் இதை சரி செய்ய முடியும்.

எனவே, அரசு பாலிடெக்னிக்குகளில் இலவசக் கல்வி வழங்கப்படும் நிலையில், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முதல் தலைமுறை மாணவர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து உதவித்தொகைகளையும் வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். அதன்மூலம் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் பட்டயப் படிப்பு மேம்படுவற்கும், நான்காம் தொழில்புரட்சி விரைவடையவும் தமிழக அரசு உதவ வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x