Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM
நிலத்தின் சந்தை மதிப்பு அடிப்படையிலேயே குடியிருப்புகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டுக் கூட்டமைப்பு (கிரெடாய்) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலும் சரிவில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. இந்நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, குறிப்பாக இரும்புக் கம்பி, சிமென்ட் விலை உயர்வால் கட்டுமானச் செலவு அதிகரித்துள்ளது. இதனால் வீடுகளின் விலை உயர்ந்து, வீடு வாங்குவோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறும்போது, “கரோனா பாதிப்பு தொடங்கிய கடந்த மார்ச் மாதத்தில்ஒரு டன் இரும்புக் கம்பி ரூ.43 ஆயிரத்துக்கு விற்றது. இப்போது ரூ.61 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 50 கிலோ சிமென்ட் மூடை விலை ரூ.265-ல் இருந்து ரூ.330 ஆக உள்ளது. கடந்த ஆகஸ்டில் ரூ.375 வரை உயர்ந்தது. கட்டுமானச் செலவு அதிகரித்துள்ளதால் அதை வீடுகளின் விலையில்தான் ஈடுகட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க, கம்பி, சிமென்ட் விலையை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்துள்ளோம்’’ என்றனர்.
இதற்கிடையே, “கம்பி, சிமென்ட் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டு்ம்” என்று இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டுக் கூட்டமைப்பு (கிரெடாய்), அகில இந்திய கட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இடத்தை பொருத்து சந்தை மதிப்பு
“தமிழகத்தின் எந்தப் பகுதியாக இருந்தாலும் நிலம் அமைந்துள்ள இடத்தைப் பொருத்து அதன் சந்தை மதிப்பு இருக்கும். உதாரணத்துக்கு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நிலத்துக்கும், அதன் எதிரேஉள்ள கோபாலபுரத்தில் உள்ள நிலத்துக்கும் மதிப்பு வேறுபடும். மேலும், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கழிவுநீர் கால்வாய், சுடுகாடு, டாஸ்மாக் கடை, மக்கள் அடர்த்தியுடன் கூடிய குடியிருப்புகள் போன்ற பகுதிகளில் உள்ள நிலத்தின் சந்தை மதிப்பு சற்று வேறுபடும். இவ்வாறு ஒரே பகுதியில் உள்ள பல்வேறு நிலங்களின் சந்தை மதிப்பு வேறுபாடாக உள்ளது” என்று கட்டுமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கிரெடாய் தமிழ்நாடு பிரிவு தலைவர் எஸ்.ஸ்ரீதரன் கூறியதாவது:
நிலத்தின் சந்தை மதிப்பு அடிப்படையிலேயே குடியிருப்பின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கூட்டு முயற்சியில் குடியிருப்புகள் கட்டும்போது நிலத்தின் உரிமையாளருக்கும், கட்டுநருக்கும் இடையே செய்து கொள்ளப்படும் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானப் பணிகள் நடைபெறும். நிலத்தின் மதிப்பு, எப்எஸ்ஐ (தரை தளக் குறியீடு), கட்டுமானச் செலவு, முதலீட்டுக்கான வட்டி ஆகியவை அடிப்படையில் மொத்த லாப சதவீதம் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையிலேயே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கட்டுமானச் செலவு என்பது வெவ்வேறு காலகட்டங்களில் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கும். ஆனால், அதுமட்டுமேகுடியிருப்பின் விலையை நிர்ணயிப்பதில்லை. குறிப்பாக கம்பி, சிமென்ட் ஆகியவை தவிர வெவ்வேறு கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் கட்டணம் உள்ளிட்ட பிற காரணங்களால் கட்டுமானநிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. அந்த செலவு வாடிக்கையாளர்களிடம் இருந்தே வசூலிக்கப்பட வேண்டும்.
கூடுதல் விலை எங்களுக்கு லாபமல்ல
குறிப்பிட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத் திட்டத்தில் ஏற்கெனவே வீடுகளை வாங்கியவர்களிடம் இருந்து கூடுதல் செலவினத்தை வசூலிக்க முடியாது. அதனால்தான், அந்த கட்டுமானத் திட்டத்தில் விற்கப்படாத வீடுகளை வாங்க வருவோரிடம் எங்கள் கூடுதல் செலவினத்தை ஈடுகட்டும் வகையில் விலையை உயர்த்தி விற்க வேண்டி வருகிறது. இல்லையேல், கட்டுமான நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிவரும்.
அதுமட்டுமல்லாமல், சிமென்ட், கம்பி விலை உயரும் போதெல்லாம் நாங்கள் மேற்கொள்ளும் புதிய கட்டுமானத் திட்டப் பணிகளில் வீடுகளின் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த கூடுதல் விலை உயர்வை எங்களுக்கு கிடைக்கும் லாபமாகப் பார்க்க முடியாது.
இவ்வாறு ஸ்ரீதரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT