Published : 13 Jun 2014 08:30 AM
Last Updated : 13 Jun 2014 08:30 AM
‘காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் வரையறைக் குழு அமைப்பது கட்டாயம். இதுதொடர்பான கர்நாடக அரசின் வாதம் தவறானது’ என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காவிரி நீரில் தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி, கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி அடி நீர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு, கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் சந்திப்பு
இந்த உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் வரையறைக் குழு அமைக்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லி வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்தினார். அதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இதற்கிடையே, கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அனைத்துக் கட்சி எம்பி-க்களுடன் கடந்த 10-ம் தேதி டெல்லியில் பிரதமரைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, ‘காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் வரையறைக் குழு அமைப்பது காவிரி நடுவர் மன்றத்தின் பரிந்துரையே தவிர, கட்டாய உத்தரவல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்ட ஆலோசனை
மேலும், காவிரி நடுவர் மன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்றும், அத்தகைய செயல் மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தடுக்க கர்நாடக அரசு சட்ட ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து, சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் ‘தி இந்து’ நாளிதழுக்கு தெரிவித்த பதிலில் கூறியிருப்பதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் வரையறைக் குழு அமைக்கும் உத்தரவு பரிந்துரை தான். அதை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்ற கர்நாடக அரசின் வாதம் தவறானது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு உத்தரவுதான். அதை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.
மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல் என்ற வாதமும் தவறானது. ஒரு மாநில அரசுக்கு எதிராக இன்னொரு மாநில அரசு வழக்கு தொடரும்போது, எந்த அதிகாரத்தின் கீழ் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. அதுபோன்ற உத்தரவுதான் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவு.
வாக்கு வங்கி அரசியல்
வழக்கு நிலுவையில் இருப்பதால் மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதும் தவறு. காவிரி நடுவர் மன்ற உத்தரவுக்கு இதுவரை எந்தத் தடையும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, அந்த உத்தரவு இப்போதும் பொருந்தும். வாக்கு வங்கி அரசியலுக்காக கர்நாடகா வேண்டுமென்றே இவ்வாறு கருத்து தெரிவித்து வருகிறது. இவ்வாறு மோகன் பராசரன் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் காவிரி நதிநீர் வழக்குகளில் தமிழகம் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் ப.பாலாஜி கூறியதாவது:
மாநிலங்களிடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956-ன் படிதான் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 76-ம் ஆண்டு கிருஷ்ணா நடுவர் மன்றத் தீர்ப்பு வெளிவந்தது. 79-ம் ஆண்டு நர்மதா நதிநீர் நடுவர் மன்ற தீர்ப்பு வெளிவந்தது.
அப்போது நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற வாதம் எழுந்தபோது, உச்ச நீதிமன்றம் தலையிட்டு, நடுவர் மன்ற தீர்ப்புகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில், நதிநீர் தாவா சட்டம் 1956-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பிரிவு 6(ஏ)(1) மற்றும் 6(ஏ)(2) ஆகியவை 27.8.1980-ல் திருத்தப்பட்டு, உத்தரவை அமல்படுத்த நடுவர் மன்றமே திட்டங்களை வகுக்கலாம் என்று சட்டம் இயற்றப்பட்டது.
அதன்பிறகு நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த அதிகாரம் படைத்த அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. எனவே, 6.8.2002-ல் நதிநீர் தாவா சட்டம் இரண்டாவது முறையாக திருத்தப்பட்டு, தாவாவுக்குரிய இரண்டு மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் அமைப்பை மத்திய அரசு உருவாக்க அதிகாரம் அளிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணை
இந்த சட்ட திருத்தங்களுக்குப் பின், நடுவர் மன்றத்தின் தீர்ப்பு முழு அதிகாரம் படைத்ததாகி விடுகிறது. நடுவர் மன்ற தீர்ப்பு குறித்து கேள்வி எழுந்தபோது, நடுவர் மன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணையாக கருத வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் தொகுதி – 5, பக்கம் -224-ல், ‘காவிரி நதிநீரை பங்கிட காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் வரையறைக் குழு அமைக்க வேண்டும்’ என்று தெளிவான உத்தரவாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் பரிந்துரையாக தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு வழக்கறிஞர் ப.பாலாஜி கூறினார்.
பல ஆண்டு கால சட்ட போராட்டத்தில் தமிழகம் வெற்றி பெற்றாலும், அதை அமல்படுத்தி காவிரி நீரைப் பெற, மேலும் பல போராட்டங்களை தமிழகம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT