Published : 13 Jun 2014 10:22 AM
Last Updated : 13 Jun 2014 10:22 AM

மத நல்லிணக்கத்தை உருவாக்க ராமாயணம் படிக்கிறேன்: வரிக்கு வரி விளக்கம் தருகிறார் ‘ராமாயண’ சாகிபு

‘‘எம்மதமும் சம்மதம் என்கிறார்கள். நான் எம்மதமும் நம்மதம் என்கிறேன். தன்னோடு வந்து சேர்ந்தவர்களை எல்லாம் தோழர்களாக்கினார் ராமபிரான். நபிகள் நாயகம் தனது தோழர்களை ’சகாபாக்கள்’ என்று சொன்னார். சகாபா என்பதுதான் சாகிபு ஆகிவிட்டது. எனவே, நான் ராமாயணத்தின் தோழன்’’ - மதவாதிகளுக்கு சவுக்கடி கொடுக்கிறார் ராஜா முகமது என்ற ராமாயண சாகிபு.

அதென்ன ராமாயண சாகிபு? மத்திய உளவுத் துறையில் ’ஹைப்பர் டென்ஷன்’ ஏரியாவாக வர்ணிக்கப்படும் தென்காசியைச் சேர்ந்தவர் ராஜா முகமது. கூட்டுறவுத் துறையில் 35 ஆண்டுகள் பணி செய்து இணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் மொழி மீதும் சைவத்தின் மீதும் தீராப் பற்று கொண்ட இவர், கம்ப ராமாயணத்தை தலைகீழாய் புரட்டிப் போடுகிறார். கம்பராமாயண பாடல்களை இசையுடன் பாடும் ராஜா முகமது, வரிக்கு வரி அழகாய் பொருள் விளக்கம் தருகிறார்.

நெல்லை, கோவை, மதுரை, காரைக்குடி, சென்னை என அனைத்து ஊர் கம்பன் கழக மேடைகளிலும் ராஜா முகமதுவின் குரலில் கம்பராமாயண பாடல்கள் கணீரென்று ஒலித்திருக்கின்றன. ராமாயணத்தின் மீது இவர் கொண்டிருக்கும் பற்றுதலை பாராட்டி 2011-ல் நெல்லை கம்பன் கழகம் கொடுத்த பட்டம்தான் ‘ராமாயண சாகிபு’. இப்போது இவரை ராமாயண சாகிபு என்றால் தான் பல பேருக்குத் தெரிகிறது.

ராமரையும் பாபரையும் பரம எதிரியாக்கிவிட்ட இந்தக் காலத்தில் நீங்கள் ராமாயணம் பாடுவதை உங்கள் சமுதாயத்தில் எதிர்க்கவில்லையா? ராமாயண சாகிபுவிடமே கேட்டோம். ’’ஆரம்பத்தில் சில சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தது. ராமன் தன்னோடு இணைந்தவர்களை எல்லாம் தோழர்களாக்கினார். நபிகள் நாயகம் தனது நண்பர்களை எல்லாம் ’சகாபா’க்கள் என்று சொன்னார். சகாபாதான் சாகிபு ஆனது. எனவே நான் ராமாயணத் தின் தோழன். ராமனுக்கு தம்பி சத்துருக்கனன். ‘சத்’ என்றால் நல்ல என்று பொருள். துருக்கனன்தான் இப்போது துலுக்கன் ஆகிவிட்டது.

தெய்வமே மண்ணில் வந்து மக்களை வாழ வைத்ததுதான் ராமாயண கதை. ராமன் இந்த மண்ணில் நல்லிணக்க நாயகனாக வாழ்ந்திருக்கிறார். முன்பெல்லாம் மன்னர்கள்தான் மக்களின் உயிராக போற்றப்பட்டார்கள். ராமன் காலத்தில் மக்கள்தான் மன்னர்களின் உயிராக மதிக்கப்பட்டார்கள். ராமபிரானின் கலியுக அவதாரம்தான் நபிகள் நாயகம் என்கிறார் மார்க்க அறிஞர் ஜாஹிர் நாயக். ஆக, இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் என்பதுதான் உண்மை.

மதவெறி கொண்டவர்களுக்கு இதுபற்றிய தெளிவான பார்வை இல்லாததால் குழப்பம். எனது சொந்த ஊருக்குத் தேவை மத நல்லிணக்கம். அந்த நல்லிணக்கத்தை உருவாக்க ராமாயணம் படிக்கிறேன். இந்தியாவில் உள்ள முக்கியத் திருத்தலங்கள் அனைத்திற்கும் நான் சென்றிருக்கிறேன். நண்பர்கள் சேர்ந்து ’பொதிகை இலக்கிய வட்டம்’ என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறோம். மாதம் ஒருமுறை இலக்கிய வட்ட கூட்டத்தை கூட்டி மத நல்லிணக்கக் கருத்துக்களை பரப்பி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக தென்காசியில் அனைத்து சமுதாயத்தினரையும் அழைத்து இஃப்தார் விருந்து கொடுக்கிறோம்’’ என்று சொன்னார்.

நீங்கள் ராமாயணம் படிப்பதை உங்கள் மனைவி - மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?’’ என்று கேட்டதற்கு, ‘‘எனக்கு உந்து சக்தியே அவர்கள்தான். ‘தவம் செய்த தவமாம் தையல்’ என்று சீதையைப் பற்றி அனுமன் சொல்கிறார். என்னுடைய துணைவியார் ரஹிமா பீவிக்கு ‘தவம் செய்த தவம்’ என்ற விருதை தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் வழங்கி இருக்கிறார். ரஹிமா எனக்கு பக்கபலமாய் இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறென்ன அடையாளம் வேண்டும்?’’ என்று சொல்லி சிரித்தார் ராமாயண சாகிபு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x