Published : 19 Jan 2021 10:00 PM
Last Updated : 19 Jan 2021 10:00 PM
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரக்கோரி அரசிடம் மனு கொடுக்குமாறு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
திருச்சி லால்குடியைச் சேர்ந்த பார்த்திபன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மக்கள் வரிப்பணத்தை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். அரசுத் துறைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. வருவாய், பத்திரப்பதிவு, போக்குவரத்து, வணிகவரி, கல்வித் துறைகளில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது.
அரசு அதிகாரிகள் பயமில்லாமல் ஊழல் செய்து வருகின்றனர். ஊழலை தடுப்பது குறித்து பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பலனில்லை. தமிழகத்தில் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
எனவே ஊழல் அதிகாரிகளுக்கு அதிகபட்சம் தூக்கு தண்டனை, வாழ்நாள் சிறை மற்றும் அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது, நகைகள், பணத்தை பறிமுதல் செய்யும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட அரசிடம் மனு அளித்த மனுதாரர் பரிகாரம் தேடலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT