Published : 19 Jan 2021 09:40 PM
Last Updated : 19 Jan 2021 09:40 PM
மசினகுடியில் காயத்துடன் வலம் வந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொக்காபுரம் பகுதியில் 40 வயது ஆண் யானை முதுகில் காயத்துடன் சுற்றி வந்தது.
இந்த யானைக்கு வனத்துறையினர் இரண்டு மாதங்களுக்கு முன் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளித்தனர். ஓரளவு குணமடைந்த யானை மசினகுடி மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடியது.
இதனால் பொது மக்களுக்கு, ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் யானையைப் பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இன்று விஜய், வசீம், கிரி, கிருஷ்ணா ஆகிய முதுமலை கும்கி யானைகள் உதவியுடன் காயத்துடன் சுற்றித் திரிந்த யானையை வனத்துறையினர் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி வளைத்தனர்.
முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஸ்குமார் துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க மருந்து செலுத்தினார். யானை லேசாக மயக்கம் அடைந்தவுடன் கும்கி யானைகள் அருகே வந்த போது காட்டு யானை தனது தும்பிக்கையை நீட்டி கொஞ்சியது.
பின்னர் சிறிது நேரத்தில் யானை திடீரென கிழே விழுந்தது. பதறிப்போன வனத்துறையினர் நீரை யானையின் மீது ஊற்றி, உஷ்ணத்தை குறைத்தனர். பின்னர் மயக்கம் தெளிய மருந்து கொடுத்ததும், யானை லேசாக எழ முற்பட்டது. வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் யானையை நிமிர்த்தி, பின்னர் லாரியில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்துக் கொண்டு சென்றைனர்.
ஆனால் நல்வாய்ப்பு அமையாததால் யானை தெப்பக்காடு கொண்டு செல்லும் வழியில் லாரியிலேயே உயிரிழந்தது.
இறந்த யானை மன்றடியார் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பிற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்படும்.
இதுகுறித்து, முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஸ்குமார் கூறியதாவது: யானையின் முதுகுக் காயம் மிக ஆழமாக இருந்தது. தவிர சமூக விரோதிகள் யானையின் காதில் தீ பந்தத்தை வீசியுள்ளனர். இதனால், காதின் ஒரு பகுதி சிதைந்து ரத்தம் வழிந்தோடியுள்ளது.
முதுமலை காப்பகத்தில் சிகிச்சை அளிக்க முயற்சி செய்தோம். ஆனால் யானை உயிரிழந்தது. யானைக்கு ஏற்பட்ட காயங்களால் பலவீனமாகி இருந்தது என்றார்.
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறும் போது, ‘யானையின் காதில் காயம் ஏற்படுத்தியவர்களைக் கண்டறிந்து வனத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT