Published : 19 Jan 2021 08:21 PM
Last Updated : 19 Jan 2021 08:21 PM
திமுக சார்பில் நடத்தப்படும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களில், ரேஷனில் பொருட்கள் விநியோகம் குறித்தே அதிக அளவில் புகார்கள் அளிக்கப்படுவதாகத் திருச்சி தெற்கு மாவட்டத் திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி தெற்கு மாவட்டத் திமுக அலுவலகத்தில் இன்று அவர் அளித்த பேட்டி:
''மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் முன்வைக்கக்கூடிய, அளிக்கக்கூடிய மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளைத் தொகுத்துக் கட்சியின் தலைமைக்கு அளித்துள்ளோம். அதில் எந்தெந்தப் பிரச்சினைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதைப் பகுப்பாய்வு செய்து, அதற்கேற்ப திமுகவின் அடுத்தடுத்த செயல்பாடுகள் அமையும்.
அதேபோல மக்கள் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களிடமும் அளித்துள்ளோம். அவற்றில் சுடுகாட்டுக்குப் பாதை அமைத்தல் உள்ளிட்ட சில முக்கியக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியுள்ளது.
கிராமப்புறங்களைப் போலவே நகர்ப் புறங்களில் வசிப்போரும் தங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனப் புகார் கூறியுள்ளனர். அதேபோல ரேஷன் கடைகளில் பொருட்கள் முழுமையாகக் கிடைக்காமல் இருப்பது, குறிப்பிட்ட சில பொருட்களை வாங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது, வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைவாக இருப்பது, தேவையான அளவுக்கு பொருட்கள் இருப்பு இல்லாமல் இருப்பது போன்ற புகார்கள் அதிக அளவில் வந்துள்ளன.
இன்னும் 3 மாதத்தில் வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார். அதன்பின் பொதுமக்கள் அளித்த அனைத்துக் கோரிக்கைகளின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுகவுக்கு உட்பட்ட திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, மணப்பாறை ஆகிய 3 தொகுதிகளிலும் தீவிரமாகத் தேர்தல் களப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டால், எந்தத் தொகுதியிலும் நிற்க நான் தயாராக இருக்கிறேன். திருவெறும்பூர் தொகுதியிலுள்ள மாநகராட்சிப் பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. இதுகுறித்துச் சட்டப் பேரவையிலும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடமும் பலமுறை வலியுறுத்தினேன். இந்நிலையில் திருச்சி மாநகராட்சியிலுள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியிலுள்ள சாலைகளைச் சீரமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுகனூர் பகுதியில் நேற்று திமுகவின் மாநில மாநாட்டுக்காகப் பூமி பூஜை செய்த நிகழ்வு, கட்சி சார்ந்த திட்டமிட்ட நிகழ்ச்சி அல்ல. அது, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் சென்டிமென்ட். மாநாடு, பொதுக்கூட்டம் என எதுவாக இருந்தாலும் பூமி பூஜை போட்டுத்தான் தொடங்குவார். அதற்காக அங்கு கே.என்.நேரு சென்றபோது, மற்றவர்களும் உடன் சென்றிருக்கலாம். யாருக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு இல்லை. நான் பங்கேற்காததில் அரசியல் ஏதுமில்லை.''
இவ்வாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT