Published : 19 Jan 2021 08:06 PM
Last Updated : 19 Jan 2021 08:06 PM
குடியரசுத் தலைவரைச் சந்தித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைத் திரும்பப் பெற புகார் தர உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
கோப்புகள் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைச் சந்திக்க அனுமதி கேட்டுக் கிடைக்காததால் 10-வது நாளாக இன்றும் சட்டப்பேரவையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் அமைச்சர் கந்தசாமி ஈடுபட்டிருந்தார். பின்னர் காலையில் அவர் அங்கிருந்து புறப்பட்டு, ராஜ்நிவாஸ் சென்று கிரண்பேடியைச் சந்திக்க முயன்றார். அவரை அனுமதிக்காததால் ராஜ்நிவாஸ் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டார்.
அவரைச் சந்திக்கச் சென்ற முதல்வர் நாராயணசாமி மற்றும் எம்.பி. வைத்திலிங்கம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரை போலீஸார், மத்தியப் படையினர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து பாரதி பூங்காவை அடுத்த குபேர் சிலை பகுதியில் டிஜிபி அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் காவல்துறை உயர் அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து முதல்வரிடமும் பேசினர். ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வரை டிஜிபியோ, ஏடிஜிபியோ நேரில் வந்து சந்திக்கவில்லை.
இந்நிலையில் ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு ராஜ்நிவாஸ் வெளியே அமர்ந்துள்ள அமைச்சர் கந்தசாமியை அழைத்து வர முதல்வர் நாராயணசாமியை மட்டும் போலீஸார் அனுமதித்தனர்.
அதையடுத்து ராஜ்நிவாஸ் வாசலில் அமர்ந்திருந்த அமைச்சர் கந்தசாமியை முதல்வர் நாராயணசாமி அழைத்து வந்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில், " கிரண்பேடியைக் கண்டித்து அமைச்சர் கந்தசாமி அமைதியான முறையில் போராடினார். 36 கோப்புகளுக்கு கிரண்பேடி அனுமதி வழங்கவில்லை. சில கோப்புகளுக்குத் தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.
தொடர்ந்து 10 நாட்கள் போராட்டத்தால் அமைச்சருக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. அதனால் அவருக்கு மயக்க நிலை இருப்பதால் ஆளுநர் மாளிகை முன் போராட்டத்தைக் கைவிட்டு வர அழைத்தேன். இந்தப் போராட்டங்களுக்கு விடிவு வரும்.
வரும் 21, 22ஆம் தேதிகளில் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அனுமதி கிடைத்தவுடன் டெல்லி சென்று கிரண்பேடியைத் திரும்பப் பெறக் குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்த உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து ஐந்து மணி தர்ணா போராட்டம் நிறைவடைந்தது. மேலும், பத்து நாட்கள் போராட்டம் நடத்தி வந்த அமைச்சர் கந்தசாமியின் போராட்டமும் முடிவடைந்தது. இப்போராட்டத்தின்போது முக்கிய அமைச்சரான நமச்சிவாயம் உள்ளிட்ட சில காங்கிரஸ் எம்எல்ஏக்களே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT