Published : 19 Jan 2021 08:01 PM
Last Updated : 19 Jan 2021 08:01 PM
மே மாதத்திற்குப் பிறகு திமுக என்ற ஒரு கட்சியே இருக்காது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று இரவு எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:
''இன்று யார் யாரோ எம்ஜிஆரின் பெயரைச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். எதிர்க் கட்சியினர் கூட எம்ஜிஆரின் பெயரைச் சொன்னால்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஏன் ஸ்டாலின் கூட எம்ஜிஆர் பாடலைப் பாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் எப்போது வேண்டுமானாலும் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்.
நாங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம் என்று தைரியமாக மக்களிடத்தில் வாக்குக் கேட்டு வருவோம். ஸ்டாலினுக்கு கருணாநிதி ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று மக்களிடம் சென்று வாக்குக் கேட்க தைரியம் இருக்கிறதா? மே மாதத்திற்குப் பிறகு திமுக என்ற ஒரு கட்சியே இருக்காது.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியையும், 2006 முதல் 2011 வரை நடந்த திமுக ஆட்சியையும் வியாபாரிகள், தாய்மார்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒப்பிட்டுச் சிந்தித்துப் பாருங்கள். திமுக ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து, அராஜகம், ரவுடியிசம், ஆள் கடத்தல், கொலை, கொள்ளை நடந்தது. இந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ரவுடிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். நாடு அமைதியாக இருக்கிறது. அமைதி மட்டுமல்ல மிகப்பெரிய வளர்ச்சியையும் பெற்றிருக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நகைக் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று மக்களிடம் பொய்யான வாக்குறுதியை கொடுத்துத் திமுகவினர் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். அந்த 39 பேரும் டெல்லி சென்று நகைக் கடனைத் தள்ளுபடி செய்வது பற்றி மத்திய அரசிடம் ஏதாவது பேசியிருக்கிறார்களா? நகைக் கடன், கல்விக் கடன் எல்லாம் தள்ளுபடி செய்யப்படும், அதையும் நாங்களே செய்வோம். திமுகவினர் கூறும் பொய்யான வாக்குறுதி, கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி மக்கள் ஏமாறாதீர்கள்.
நீட் தேர்வை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார். தமிழக மாணவர்கள் மீது ஸ்டாலினுக்கு அக்கறை கிடையாது. நீட் தேர்வை நீக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கொள்கை. இதற்காகத்தான் இன்று வரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம். நீட் தேர்வுக்கு மாற்று வழியைச் சிந்தித்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தோம். ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டத்தை நிறைவேற்றிய ஆளுமை மிக்கவர் முதல்வர் பழனிசாமி.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததால் இந்த ஆண்டு 430 மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வை எடுக்கும் வரைதான் இந்தச் சட்டம் இருக்கும். மக்களை எப்படியாவது ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று திமுகவினர் நினைக்கிறார்கள்.
ஜனநாயக ரீதியில் கட்சி நடத்துகிறோம் என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் திமுகவில் என்னை எதிர்த்து யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம், யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாம், போட்டியிடலாம் என்று சொல்லிப் பாருங்கள். அதன் பிறகு அந்த கட்சியின் நிலைமை தெரியும்.
அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே அரசு அதிகாரிகளையும், மக்களையும் மிரட்டும் தொனியில் ஸ்டாலின் பேசுகிறார். அதிகாரத்திற்கு வந்தால் என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்''.
இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT