Published : 19 Jan 2021 07:46 PM
Last Updated : 19 Jan 2021 07:46 PM
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மாநிலத்தின் உரிமையை மீட்போம் என்று தேனி வடக்கு மாவட்டத் திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தேனி அருகே அரண்மனைப் புதூரில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நாளை (புதன்) நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.
இதுகுறித்த செய்தியாளர்கள் கூட்டம் தேனியில் இன்று நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசியதாவது:
''ஸ்டாலின் முதல்வரானதும் ஜெயலலிதா இறப்பு குறித்த மர்மத்தைக் கண்டறிந்து உண்மையை வெளிப்படுத்துவார். இறந்தது ஒரு முதல்வர். எனவே இதன் பின்னணியை ஆராய்வது அவசியம். அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இதே பட்டியல் மோடியிடமும் இருப்பதால் அதிமுக, மத்திய அரசு சொல்வதைக் கேட்க வேண்டிய நிலையில் உள்ளது. ஆட்சி முடிந்ததும் அதிமுகவின் சப்த நாடியும் ஒடுங்கும். ஆட்சியில் இருக்கும் வரைதான் ஒன்றாக இருப்பார்கள். பின்பு தலைமையின் பேச்சை யாரும் கேட்கமாட்டார்கள். பல பிரிவுகளாக அதிமுக சிதறும்.
தமிழகத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் இருந்தும் நாடாளுமன்றத்தில் குரல் மட்டுமே கொடுக்க முடிகிறது. நீட் தேர்வு, மின்சாரக் கொள்கை, வேளாண் திருத்தச் சட்டம், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு போன்றவற்றிற்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால், பாஜக எங்கள் கோரிக்கையை ஏற்று எதையும் நிறைவேற்ற மறுக்கிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மாநிலத்தின் உரிமை மீட்கப்படும். இந்திய அளவில் மத்திய அரசைத் தட்டிக்கேட்கும் கட்சியாக திமுக உள்ளது. ஆட்சிக்கு வந்ததும் மக்கள் கொடுத்த மனுவின் பிரச்சினைகளைச் சரிசெய்வோம்.''
இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
உடன் பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணக்குமார், நகரப் பொறுப்பாளர் பாலமுருகன், ஒன்றியப் பொறுப்பாளர் ரத்தின சபாபதி, பொறுப்புக் குழு உறுப்பினர் ஜீவா ஆகியோர் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT