Published : 19 Jan 2021 07:34 PM
Last Updated : 19 Jan 2021 07:34 PM
மோசடி நிதி நிறுவனத்தின் முடக்கப்பட்ட சொத்தைப் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பெயர் மாற்றம் செய்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பிஏசிஎல்- பிஜிஎப் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் நலச் சங்கம் மற்றும் ஆறுமுகசாமி ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட பிஏசிஎல் என்ற தனியார் நிதி நிறுவனம் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் வாங்கியது. இப்பணம் முதிர்ச்சியடைந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு முதிர்வுத் தொகை வழங்காமல் ஏமாற்றியது.
இந்த மோசடியை சிபிஐ விசாரித்து வருகிறது. பிஏசிஎல் நிறுவனத்துக்குச் சொந்தமான பல்வேறு சொத்துகள் சிபிஐயால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி லோதா தலைமையில் குழு அமைத்து பிஏசிஎல் நிறுவனச் சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்குப் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிறுவனத்தின் சொத்துகள் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் உள்ளன. ஜமீன்செங்கல்படை கிராமத்திலும் உள்ள சொத்து சிபிஐயால் முடக்கப்பட்டுள்ளது. இந்தச் சொத்தை விற்க உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்புக் குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், சிறப்புக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் ஜமீன்செங்கல்படையில் உள்ள சொத்துகள் வேறு நபர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பிஏசிஎல் சொத்துகளை முறைகேடாகப் பெயர் மாற்றம் செய்தது தொடர்பாகவும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், ''இதுபோன்ற மோசடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். முடக்கப்பட்ட சொத்துகளைப் போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் தப்பிக்க அனுமதிக்க முடியாது.
பிஏசிஎல் நிதி நிறுவன முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, மனுதாரர்கள் தெரிவித்துள்ள முறைகேடு குறித்துத் தனி அதிகாரியை நியமித்து விசாரித்து உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்புக் குழு முன்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் சிறப்புக் குழு முடிவின் அடிப்படையில் சிபிஐ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT