Published : 19 Jan 2021 06:58 PM
Last Updated : 19 Jan 2021 06:58 PM
மதுரையில் முதல் முறையாக ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் கூறிய பதிலில் திருப்தியடையாத, இந்தக் குழுவின் இணைத் தலைவரும், மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசன், உறுப்பினர்களும், திமுக எம்எல்ஏக்களுமான பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தெளிவான பார்வையுடன் அணுக வேண்டும் என்று மத்திய அரசு மாநகராட்சிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கியுள்ளது. ஆனால், அதை எதையும் எந்த மாநகராட்சியும் கடைப்பிடிக்கவில்லை. தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடக்கும் 10 மாநகராட்சிகளில் மதுரை உள்பட 8 மாநகராட்சிகளில் இதுவரை அந்தத் திட்டத்திற்கான சிஇஓக்கள் நியமிக்கப்படவில்லை.
தலைமையே இல்லாமல் சுமார் ரூ.10,000 கோடியில் தமிழகத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழு ஒன்று அமைக்க வேண்டும் என்பதே எங்களுக்குத் தெரியாது என்று மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் சொல்கின்றனர். மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன், ஆணையர், ஸ்மார்ட் சிட்டி சிஇஓ (பொறுப்பு), மாநகராட்சி தனி அலுவலர் ஆகிய மூன்று பணிகளைச் செய்கிறார். எப்படி ஒரே நபர் இவ்வளவு பணிகளைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள முடியும்?
இதுவே இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய தோல்வி. ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் மக்கள் பணம் தமிழகத்தில் சூறையாடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழு கூட்டம் இதற்குள் 16 முறை கூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் எந்த மாநராட்சியிலும் கடந்த 3 ஆண்டுகளாக இந்தக் குழு கூட்டப்படவில்லை. தற்போதும் நாங்கள் கொடுத்த அழுத்தத்தாலே இந்தக் கூட்டம் நடந்துள்ளது. அதனாலே, மதுரையில் இந்தத் திட்டத்தில் நடக்கும் 14 பணிகளில் ஒரு பணி மட்டுமே இதுவரை நிறைவடைந்துள்ளது.
மற்ற திட்டங்களுக்காக ஊரெல்லாம் குழிதோண்டிப் போட்டு மக்களுடைய, வியாபாரிகளுடைய அன்றாட வாழ்க்கையும், வாழ்வாதாரத்தையும் முடக்கிப் போட்டுள்ளனர். தெளிவில்லாமல், முறையில்லாமல் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளால் மதுரையில் காற்று மாசு சென்னையை விட அதிகரித்துள்ளது.
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றி மாநகராட்சி முறையாக மக்களிடம் கருத்துக் கேட்கவில்லை. அவர்களின் பிரதிநிதிகளான எங்களிடமும் ஆலோசனை கேட்கவில்லை. குறிப்பாக பெரியார் பஸ் நிலையத்தில் 40 முதல் 60 சதவீதம் வணிகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதனால், இன்னும் 4 மடங்கு அங்கு போக்குவரத்து நெரிசல்தான் அதிகரிக்கும்.
சித்திரை வீதிகள், வெளிவீதிகள், மாசி வீதிகளில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி புனரமைப்புப் பணிகளில் மோசமான திட்ட நடைமுறைகளைச் செயல்படுத்தியதால் மக்கள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏற்கெனவே நடைபெறும் பணிகளை முடிக்காமல் அடுத்த பணிகளைத் தொடங்கக் கூடாது''.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஆரம்பத்திலே எதிர்ப்பைப் பதிவு செய்யாமல் 75 சதவீதம் முடிந்தபிறகு புகார் தெரிவிப்பது ஏன்?
ஸ்மார்ட் சிட்டியில் நடக்கும் 14 திட்டப் பணிகளும் கிட்டத்திட்ட 75 சதவீதம் எட்டியுள்ளன. பெரும்பாலான பணிகள் முடியும் தறுவாயில் உள்ளன. இந்தச் சூழலில் இதுவரை இதற்கான வலுவான எதிர்ப்பையும், ஆலோசனைகளையும் கூறாமல் தற்போது தாமதமாக வந்து குற்றம் சாட்டுவது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சு.வெங்கடேசன், ‘‘இந்தத் திட்டத்திற்கான நெறிமுறைகள், வழிகாட்டுதல்களைத் தெரிந்து கொள்வதற்குள் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. மேலும், இடையில் 8 மாதம் கரோனா வந்துவிட்டது.
2 மாதத்திற்கு முன்பே மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பு, வளர்ச்சி மற்றுமு் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன். அதற்குள் அந்த ஆட்சியர் மாறுதலாகிச் சென்றுவிட்டார். தற்போது மீதமுள்ள திட்டத்தையாவது உருப்படியாகச் செய்யலாம் என்றே இந்தக் கூட்டத்தைக் கூட்டச் சொன்னோம். இனி அவர்கள் கூட்டாவிட்டாலும் நாங்கள் இந்தக் கூட்டத்தைக் கூட்டிக் கேள்வி கேட்போம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT