Published : 19 Jan 2021 05:40 PM
Last Updated : 19 Jan 2021 05:40 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சாலையை சீரமைக்காததைக் கண்டித்து, திமுகவினர் சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினர். அப்போது முன்னாள் அமைச்சர் தென்னவன் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடி நகராட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.112.50 கோடியில் பாதாளச் சாக்கடை பணி தொடங்கியது. இப்பணி கடந்த ஆண்டு மார்ச் மாதமே முடிவடைந்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது வரை 50 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. பாதாளச் சாக்கடை குழிகள் மூடிய பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன.
இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதைக் கண்டித்தும், விரைந்து புதிய சாலைகள் அமைக்க வலியுறுத்தியும் திமுகவினர் ஐந்துவிளக்கு அருகில் சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினர்.
முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் குணசேகரன், முன்னாள் எம்எல்ஏ துரைராஜ், முன்னாள் நகராட்சித் தலைவர் முத்துதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகி நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது தென்னவன் திடீரென மயங்கியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டம் நடத்திய திமுகவினரிடம் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த திமுகவினர் அண்ணாசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 15 நாட்களில் சாலைகளை சீரமைப்பதாக உறுதியளித்ததை அடுத்து திமுகவினரிடம் போராட்டத்தை கைவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT