Published : 19 Jan 2021 04:27 PM
Last Updated : 19 Jan 2021 04:27 PM
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடராதா? இதுகூடத் தெரியாமல் சட்ட அமைச்சராக சி.வி.சண்முகம் உள்ளார் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி கிண்டல் செய்துள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று இரவு எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, ''நீட் தேர்வை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார். நீட் தேர்வை நீக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கொள்கை. இதற்காகத்தான் இன்று வரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நீட் தேர்வுக்கு மாற்று வழியைச் சிந்தித்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தோம். ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டத்தை நிறைவேற்றிய ஆளுமைமிக்கவர் முதல்வர் பழனிசாமி. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததால் இந்த ஆண்டு 430 மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வை எடுக்கும் வரைதான் இந்தச் சட்டம் இருக்கும்'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்.
விழுப்புரத்தில் இன்று திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டாலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டம் அப்படியே தொடராதா? இதுகூடத் தெரியாமல் சட்ட அமைச்சராக சி.வி.சண்முகம் உள்ளார். நீட் தேர்வை அதிமுக ஆதரிக்கிறதா? அதை அப்படியே செயல்படுத்தவேண்டியதுதான்.
ஸ்டாலின் மீது குறை சொல்வதற்காக எதைவேண்டுமானாலும் சொல்கிறார். நுழைவுத்தேர்வும் இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும்.
தூத்துகுடியில் துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான நிகழ்வுகள் எல்லாவற்றையும் மக்கள் அறிந்து வைத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
வரும் தேர்தலில் 234 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் குடும்ப ஆட்சி என்கிறார்கள். எம்ஜிஆருக்குப் பின் ஜெயலலிதா எப்படி வந்தார் என்பது தெரியும். அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மகன்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். இது வாரிசு அரசியல் இல்லையா? வாரிசுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. 3 சதவீதம் இப்படிக் கொடுப்பதில் தவறில்லை.
உதயநிதி மிகச் சிறந்த பேச்சாளராக இருப்பது பிடிக்காமல் அவர் மீது வழக்குத் தொடர்கிறார்கள். ஸ்டாலின் எம்ஜிஆர் ரசிகராக இருப்பதாகச் சொல்லியுள்ளார். எம்ஜிஆர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று சி.வி.சண்முகம் எப்படிச் சொல்கிறார் என்று தெரியவில்லை. காலில் விழுந்து முதல்வராவது திமுகவில் இல்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் எவ்வித நலப்பணிகளும் நடைபெறவில்லை. பாதாள சாக்கடை திட்டம், புதிய பேருந்து நிலையத்தில் தேங்கும் நீர் வெளியேற்றப்படவில்லை. கோட்டகுப்பத்தில் தூண்டில் வலை அமைக்கப்படவில்லை. மரக்காணத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படவில்லை. மொத்தத்தில் இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை”.
இவ்வாறு பொன்முடி கூறினார்.
அப்போது மாவட்டச் செயலாளர் புகழேந்தி, மாவட்ட அவைத் தலைவர் ஜெயசந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT