Published : 19 Jan 2021 03:06 PM
Last Updated : 19 Jan 2021 03:06 PM
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைச் சந்திக்க அனுமதி கிடைக்காததால் ராஜ்நிவாஸ் அருகே அமைச்சர் கந்தசாமி தர்ணாவில் ஈடுபட்டார். இத்தகவல் அறிந்து அவரைப் பார்க்கச் சென்ற முதல்வர் நாராயணசாமியைத் துணை ராணுவத்தினரும், போலீஸாரும் தடுத்தனர். இதனால் முதல்வர் நாராயணசாமி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான 36 முக்கியக் கோப்புகளுக்குத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஓப்புதல் அளிக்கக் கோரியும், விவாதிக்க நேரம் வழங்கக் கோரியும் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று 10-வது நாளாக சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேரம் ஒதுக்காமலும், ஒப்புதல் அளிக்காத நிலையிலும் உள்ள ஆளுநர் கிரண்பேடியைச் சந்திக்க அமைச்சர் கந்தசாமி முடிவு செய்தார். திடீரென சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் சென்று கிரண்பேடியைச் சந்திக்க அமைச்சர் கந்தசாமி முயன்றார்.
ஆனால், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் துணை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதால் ஆளுநர் மாளிகை அருகே சாலையில் அமர்ந்து அமைச்சர் கந்தசாமி தர்ணாவில் ஈடுபட்டார்.
போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், ஆளுநரைச் சந்தித்த பின்னர்தான் செல்வேன் எனத் தெரிவித்துத் தொடந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அமைச்சர் கந்தசாமியின் போராட்டம் பற்றித் தகவலறிந்த அவரின் ஆதரவாளர்கள் ஏம்பலம் தொகுதியிலும், காங்கிரஸார் பல்வேறு பகுதிகளிலும் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், ஆளுநர் மாளிகையைச் சுற்றிலும் தடுக்கப்பட்ட பகுதிகளில் குவிந்தனர்.
தகவலறிந்த முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், வைத்திலிங்கம் எம்.பி., எம்எல்ஏக்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அமைச்சர் கந்தசாமியைச் சந்திக்க சட்டப்பேரவையிலிருந்து வந்தனர்.
அவர்களை போலீஸார், துணை ராணுவத்தினர் குபேர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த முள் வேலி தடுப்பில் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்து அமைச்சரைச் சந்திக்க அனுமதி மறுத்தனர். இதனையடுத்து முதல்வர் நாராயணசாமி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் போலீஸார் அவர்களை அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து முதல்வர் நாராயணசாமி மற்றும் எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து அங்கிருந்த காங்கிரஸார் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து முதல்வர், அமைச்சர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதிமுக எம்எல்ஏவுக்கு அனுமதி மறுப்பு
இதனிடையே புதுவை மாநில சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்க வந்ததார். அவரை பாரதிதாசன் சிலை அருகே தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர். இதனால் ரோமண்ட் ரோலண்ட் நூலகம் வழியாக ஆளுநர் மாளிகைக்கு வர முயன்றார்.
அங்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) பிரதிக்ஷா உள்ளே செல்ல அனுமதி மறுத்தார். இதனால் அவரும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆளுநரின் சிறப்பு தனி அதிகாரி தேவநீதிதாஸைத் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது தேவநீதிதாஸ், மனுவை போலீஸார் மூலம் கொடுத்தனுப்பும்படி கேட்டுக் கொண்டார். மக்கள் பிரதிநிதியைக் கூட ஆளுநரைச் சந்திக்க அனுமதி மறுப்பீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். தன்னை அவமதித்த போலீஸார் மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் புகார் அளிப்பேன் என்று கூறிய அன்பழகன், அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT