Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM
தமிழகத்தில் ராகுல்காந்தி 5 கட்டங்களாக தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 5 கட்டங்களாக ராகுல்காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளார். முதல் கட்டமாக கோவை மண்டலத்தில் 3 நாட்களும், தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறார். இறுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்வார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரம்மாண்ட பிரச்சார கூட்டம் நடத்தப்படவுள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, கூட்டணியில் எத்தனை கட்சிகள் அங்கம் வகிக்கும், புதிதாக வரும் கட்சிகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து கட்சிகள் போட்டியிடும் இடங்கள் பேசி முடிவெடுக்கப்படும்.
முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்பதை முன்னிறுத்தி எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. தமிழக அரசின் செயல்படாத தன்மை, ஊழல், மத்திய அரசின் கைப்பொம்மையாக இருப்பது, புதிய தொழிற்சாலைகள் தொடங்காதது, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்வோம்.
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகிறது.
தென்மாவட்டங்களில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுத்து, ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும். கரோனா தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாக கிடைக்கச் செய்வதுடன், இது தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்க வேண்டும் என்றார்.
முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT