Published : 18 Jan 2021 09:59 PM
Last Updated : 18 Jan 2021 09:59 PM
தான் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக்கு ஒன்றும் செய்யாத முதல்வர் பழனிசாமி, 234 தொகுதிகளுக்கும் என்ன செய்ய முடியும்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் – எடப்பாடி தொகுதிக்குட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சியில் இன்று (18-01-2021) மாலை நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
''எடப்பாடி தொகுதிக்குட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் இந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன். இந்த கிராம சபைக் கூட்டத்தில் ஏராளமான சகோதரிகள் கூடி இருப்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை நான் கலந்துகொண்ட கிராம சபைக் கூட்டங்களிலேயே அதிக அளவு மக்கள் கலந்துகொண்ட கூட்டங்களில் ஒன்றாக இந்த எடப்பாடி தொகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டம் அமைந்திருக்கிறது.
நீங்கள் எல்லோரும் உங்கள் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வந்திருப்பதுபோல் வந்து இருக்கிறீர்கள். இதைக் காணும்போது நீங்கள் எடப்பாடி ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும் என்ற முடிவெடுத்து உறுதியோடு - கட்டுக்கோப்போடு வந்திருப்பது தெரிகிறது. நாங்கள் ரெடி! நீங்கள் ரெடியா?
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா தலைமையில் ஆட்சிக்கு வந்து பிறகு, அவரது மறைவின் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த ஆட்சியில் எந்தத் திட்டமும் பணிகளும் நடைபெறவில்லை.
இந்த எடப்பாடி தொகுதி என்பது முதல்வரைத் தேர்ந்தெடுத்த தொகுதி. நீங்கள் அவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்கவில்லை; சட்டப்பேரவை உறுப்பினராகத்தான் தேர்ந்தெடுத்தீர்கள். நீங்கள் அம்மையார் ஜெயலலிதாவை முதல்வராகத் தேர்ந்தெடுத்தீர்கள். அவர் இறந்துவிட்ட காரணத்தால், ஓ.பி.எஸ். முதல்வராக வந்து, அவர் தூக்கப்பட்டு, சசிகலா முதல்வராக வர முடிவு செய்து, அவர் சிறைக்குச் செல்லக் கூடிய சூழல் ஏற்பட்டதால், யாரை முதல்வராக நியமிக்கலாம் என்று யோசித்தபோது பழனிசாமி முதல்வரானார்.
எப்படி முதல்வராக வந்தார் என்பதை நீங்கள் சமூக வலைதளங்களில் பார்த்து இருப்பீர்கள். என்ன நடந்தது? முதல்வராகி தமிழ்நாட்டுக்கு எந்தத் திட்டமாவது செய்திருக்கிறாரா? இந்தத் தொகுதிக்காவது ஏதாவது செய்திருக்கிறாரா?
எடப்பாடி பழனிசாமி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். ஜெயலலிதாவும் ஒரு மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். லட்சக்கணக்கானோர்க்கு வேலைவாய்ப்பு வழங்கப் போவதாக அவர் கூறினார். ஆனால், அது நடக்கவில்லை. அவரது மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி உலக முதலீட்டாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வந்துள்ளன; பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கப்போகிறேன் என்று இவர் சொன்னார்.
தமிழ்நாட்டில் வேலை கொடுக்காதது பற்றி வேண்டாம்; இந்த எடப்பாடி தொகுதியில் யாருக்காவது இந்த அதிமுக ஆட்சியில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? தயவுசெய்து கேட்கிறேன்.
இதோ இந்த மேசையில் அடுக்கி வைத்திருப்பதைப் பாருங்கள். இது என்ன தெரியுமா? வேலை வேண்டும் என்று கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த எடப்பாடி தொகுதியிலிருந்து மட்டும் படித்த பட்டதாரி இளைஞர்கள் 9600 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். பதிவு செய்த அந்த நகல்தான் இது. ஆதாரத்தோடு இங்கே வைத்திருக்கிறோம். இதில் ஒருவருக்காவது வேலை கிடைத்திருக்கிறதா? இல்லை.
இந்தத் தொகுதிக்கு அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் 234 தொகுதிகளுக்கும் அவர் எப்படிச் செய்ய முடியும். எனவே அப்படிப்பட்ட இந்த ஆட்சியை உடனடியாகத் தூக்கி எறிய வேண்டும் என்பதை உங்கள் உணர்வுகள் மூலமாக நான் புரிந்துகொண்டேன்.
இங்கே பேசியவர்கள் வேலைவாய்ப்புப் பிரச்சினைகள் குறித்து, ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் பெற்ற பயன் குறித்து, மருத்துவமனை பிரச்சினை, விசைத்தறி நெசவாளர்கள் பிரச்சினை, தண்ணீர் மற்றும் மணல் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தார்கள். இவை அனைத்தையும் உள்ளாட்சி அமைப்புகளில் இருப்பவர்கள் செய்ய வேண்டும். ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஊழலாட்சித்துறை அமைச்சராக எடப்பாடியை விட இரண்டு மடங்கு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்.
இங்கு பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசிய நீங்கள் விலைவாசி பிரச்சினையைப் பற்றிப் பேச மறந்துவிட்டீர்கள். இன்று விலைவாசி விஷம் போல் ஏறிக்கொண்டே போகிறது. திமுக ஆட்சியில் விலைவாசி ஏறியது. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அது கட்டுப்படுத்தப்பட்டது. கட்டுப்படுத்தப்பட்டுச் சேமிக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தோம். இன்று சேமிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பே இல்லை.
அரசினுடைய குறைபாடுகளை, லஞ்ச ஊழல்களை நாம் எடுத்துச் சொன்னால் இந்த ஊர் எம்எல்ஏவான முதல்வர் பழனிசாமி ஆத்திரமும் கோபமும் வருகிறது. இந்த கிராம சபைக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று தடையுத்தரவு போட்டார். கிராம சபைக் கூட்டம் தானே நடத்தக்கூடாது, நாங்கள் “மக்கள் கிராம சபைக் கூட்டம்” நடத்துகிறோம் என்று நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆத்திரத்தில் இப்போது அவரும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார். தொடங்கட்டும் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் முதல்வர் என்பதை மறந்து, தரம் தாழ்ந்து பேசக்கூடிய நிலையில் இன்று இருக்கிறார்.
கலைஞர், எம்.ஜி.ஆரால்தான் முதல்வர் ஆனார் என்று விஷயம் அறிந்தவர் போல் பேசிக் கொண்டு இருக்கிறார். பேரறிஞர் அண்ணா 1967இல் முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு அவர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாவலரைத் தேர்ந்தெடுக்கலாமா - தலைவர் கலைஞரைத் தேர்ந்தெடுக்கலாமா? என்ற நிலை ஏற்பட்டது.
நாவலர்தான் மூத்தவர். அவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் மனமுவந்து சொன்னார். ஆனால், தலைவர் கலைஞர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தினார்கள். அன்றைக்கு திமுகவின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆரும் வலியுறுத்தினார். இதெல்லாம் முதல்வர் பழனிசாமிக்குத் தெரிந்திருக்காது.
நான் எம்.ஜி.ஆரின் பரம ரசிகன். அவரது திரைப்படம் வெளிவந்தால் பள்ளியைப் புறக்கணித்துவிட்டு அந்தத் திரைப்படத்திற்குச் செல்லக் கூடியவன் நான். தலைவர் கலைஞரால்தான் எம்.ஜி.ஆர். திரைப்படத்துறையில் முன்னேறினார். எப்படி சிவாஜி கணேசனைப் 'பராசக்தி' திரைப்படத்தின் மூலமாகக் கதாநாயகன் ஆக்கினாரோ, அதேபோல், 'ராஜகுமாரி', 'மருதநாட்டு இளவரசி' என்று தன்னுடைய திரைப்படங்களில் எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து, 'மந்திரிகுமாரி' திரைப்படத்தின் மூலமாகப் பெரிய கதாநாயகனாக உருவாக்கித் தந்தார். இதெல்லாம் வரலாறு. இது முதல்வர் பழனிசாமிக்குத் தெரியாது.
தலைவர் கலைஞர் பெயரைச் சட்டப்பேரவையில் சொன்னவரிடம், எனக்குத் தலைவர் கலைஞர்தான் என்று சொன்னவர், எம்.ஜி.ஆர். இதெல்லாம் வரலாறு. அந்த அளவிற்குத் தலைவர் கலைஞர் மீது பற்று கொண்டவர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒன்றுகூடி தலைவர் கலைஞரை முதல்வராகத் தேர்ந்தெடுத்தபோது அவரும் ஆதரித்தார்.
துரோகம் குறித்து யார் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
இவரது ஆட்டமெல்லாம் தேர்தல் வரும்போது முடிந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால், அதற்கு முன்னதாகவே முடியப் போகிறது பாருங்கள். சசிகலா விடுதலையாகி வந்தவுடன், இவரது பதவிக்கு ஆட்டம் வரப் போகிறதா இல்லையா என்று பாருங்கள். எப்படிக் காலில் விழுந்து பதவியைப் பெற்றார். பெற்ற பிறகு என்ன மாதிரியான துரோகத்தைச் செய்தார் என்பதையெல்லாம் நீங்கள் வீடியோவில் பார்த்தீர்கள்.
இன்று அம்மாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரது படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மா ஆட்சி… அம்மா ஆட்சி… என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் அதைத் தவறு என்று கூடச் சொல்லவில்லை. ஆனால் இதுவரைக்கும் அந்த அம்மா எப்படி இறந்தார் என்பதை எடப்பாடி கண்டுபிடித்து வெளியே சொன்னாரா? இல்லை.
நாமும் ஜெயலலிதாவும் எதிரிதான். நாம் என்றைக்கும் அவர்களது கொள்கைக்கு உடன்பட மாட்டோம். அரசியல் ரீதியாக அவர் நமக்கு எதிரிதான். ஆனால் அவர் ஒரு முதல்வர். 1.1% வாக்கு அவர்களுக்கு அதிகம். அதனால் அவர்களது ஆட்சி. நமக்கு 1.1% வாக்குக் குறைவு. அதனால் நாம் எதிர்க்கட்சி. என்னதான் இருந்தாலும், அவர்கள் நமக்கும் சேர்த்துத்தான் முதல்வர். அப்படிப்பட்ட முதல்வர் எப்படி இறந்தார்? என்ற செய்தி யாருக்காவது கிடைத்ததா? கிடைக்கவில்லை.
நீதி விசாரணை வைத்தார்கள். ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணை கமிஷன் அமைத்து 3 ஆண்டுகளாகிவிட்டன. இதுவரைக்கும் யார் குற்றம் செய்திருக்கிறார்? எப்படி இருந்தார்? என்ன சூழ்நிலையில் இருந்தார்? என்ன மருந்துகள் கொடுக்கப்பட்டன? அது உண்மையான மரணமா? மர்மமான மரணம்? ஏதாவது விசாரணை வந்ததா? இல்லை. இதைப்பற்றி எடப்பாடி பழனிசாமிக்குக் கவலை இல்லை.
இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு நீங்கள் எல்லாம் தயாராக இருக்கிறீர்கள் என்பதற்கு ஆதாரமாகத் தான் இந்த எழுச்சியான கூட்டத்தை நான் பார்க்கிறேன்''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT