Published : 18 Jan 2021 05:01 PM
Last Updated : 18 Jan 2021 05:01 PM
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகள் கூட்டம் மரப்பாலத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று (ஜன.18) நடைபெற்றது. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ வரவேற்றார். வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் வாழ்த்திப் பேசினார். வெங்கடேசன் எம்.எல்.ஏ மற்றும் திமுக நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் பேசியதாவது:
‘‘23 ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைமையில் ஆட்சி அமைத்து, கறுப்பு, சிவப்புக் கொடி பறந்த மண் புதுச்சேரி. இந்த மண்ணில் மீண்டும் திமுக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, இங்குள்ள அனைவரின் உணர்வுகளையும் ஸ்டாலினிடம் சொல்ல இருக்கிறேன்.
புதுச்சேரி மாநிலத்தில் என்ன செய்ய முடியாது? ஏன் செய்ய முடியாது? தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. பல குடும்பங்கள் வீதிக்கு வந்துவிட்டன. என்ன வருவாய் வருகிறது. வருவாய்க்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள். வேலை வாய்ப்பு இல்லை. விவசாயம் பொய்த்துவிட்டது.
நான் இந்த மண்ணைச் சேர்ந்தவன். இந்த மாநிலத்தைச் சொர்க்கமாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. புதுச்சேரியை ஒரு புதுமையான, வளமான, உலகத்தில் இருப்பவர்கள் திரும்பிப் பார்க்கும் மாநிலமாக இருக்க ஸ்டாலின் தலைமையில், அவருடைய ஆணையோடு திமுக தலைமையில் கூட்டணி அமையும். எந்த இயக்கங்களுடன் கூட்டணி, யாருடன் தேர்தலைச் சந்திப்பது என்பது குறித்து ஸ்டாலின்தான் முடிவு எடுப்பார்.
நீங்கள் (திமுகவினர்) எனக்கு ஒரு உறுதியைத் தர வேண்டும். ஸ்டாலின் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுத் தந்தால்தான் நான் இங்கே வருவேன். இல்லாவிட்டால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன்’’.
இவ்வாறு ஜெகத்ரட்சகன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT