Published : 18 Jan 2021 04:07 PM
Last Updated : 18 Jan 2021 04:07 PM
புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகளான அதிமுக, என்.ஆர்.காங்கிரஸார் புறக்கணித்தனர். அதேபோல் கூட்டணிக்கட்சியான திமுகவும் பங்கேற்கவில்லை.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நிலுவை கோப்புகள் தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி அழைத்து பேசக்கோரி 9ம் நாளாக இன்றும் அமைச்சர் கந்தசாமி உள்ளிருப்பு தர்ணாவில் ஈடுபட்டிருந்தார். சபாநாயகர் சிவக்கொழுந்து அவரை பேரவை நிகழ்வில் பங்கேற்க அழைத்தார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகள் துவங்கியவுடன், சட்டப்பேரவை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் கந்தசாமியை பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க அழைக்குமாறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கந்தசாமியை பேரவைக்கு வர சபாநாயகர் அழைத்தவுடன், அமைச்சர் கந்தசாமி பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றார். காங்கிரஸை விமர்சித்து வரும் கூட்டணிக்கட்சியான திமுக ஒட்டுமொத்தமாக பேரவை நிகழ்வுகளை புறக்கணித்தது.
இச்சூழலில் பேரவை நிகழ்வுகளை அதிமுகவும் முற்றிலும் புறக்கணித்தது.படிக்கட்டுகளில் தர்ணாவில் ஈடுபட்டு புறப்பட்டனர். இதுபற்றி அதிமுக சட்டப்பேரவைக்குழுத்தலைவர் அன்பழகன் எம்எல்ஏ கூறுகையில், "புதிய வேளாண் சட்டத்தை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள நிலையில் அரசியல் சுயநலத்துக்காக புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டு வருவது தேவையானதா என்ற கேள்வி எழுகிறது. அரசியல் வெறுப்புக்காக சட்டப்பேரவையை கூட்டியுள்ளதால் பேரவை நிகழ்வுகளை முற்றிலும் புறக்கணிக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.
அதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வரவில்லை. பாஜக நியமன எம்எல்ஏக்களில் சங்கற் காலமானதையடுத்து மீதமுள்ள இருவரும் பங்கேற்றனர்.
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைநிலை ஆளுநர் சந்திராவதி , முன்னாள் புதுச்சேரி அமைச்சர்கள் ஜோசப் மரியதாஸ், ஏழுமலை, பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், எம்பி வசந்தகுமார், முன்னாள் எம்எல்ஏக்கள் பாலன், எம்ஏஎஸ் சுப்பிரமணியம், நியமன எம்எல்ஏ சங்கர் உள்ளிட்ட பலருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்தி பத்து நிமிடங்களுக்கு வைக்கப்பட்டது.
அதையடுத்து அவை நிகழ்வுகளில் பங்கேற்காமல் பாஜக உறுப்பினர்கள் சாமிநாதன், செல்வகணபதி தர்ணா நடத்தி புறப்பட்டனர். அவர்கள் கூறுகையில், "பெரும்பான்மையை இழந்து விட்ட காங்கிரஸ் வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது நாடகம். பெரும்பான்மையை நிருபிக்காமல் வேளாண் சட்டம் தொடர்பான தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லத்தக்கது அல்ல" என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT