Published : 18 Jan 2021 04:02 PM
Last Updated : 18 Jan 2021 04:02 PM
சசிகலா விடுதலையாகி வந்த பிறகு, ஒட்டுமொத்த அதிமுகவும் அவரிடம் சென்றுவிடும் என்று சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று (ஜன.18) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
”தமிழகத்திலும், புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சியானது ஒரே மாதிரியான கூட்டணியைத்தான் வைத்து வந்துள்ளது. அதன்படி வரவுள்ள தேர்தலுக்கும் அதுபோன்றுதான் இருக்கும் என்று நம்புகிறேன்.
கட்சியில் அதிக எண்ணிக்கையில் மாநில நிர்வாகிகள் பொறுப்பு வழங்குவதால் யாரும் அதிகாரத்தோடு செயல்பட முடியாது. குறைந்த எண்ணிக்கையில் பொறுப்புகள் வழங்கினால்தான் அதிகாரத்தோடு செயல்பட முடியும் என்பது எனது கருத்து.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் மக்களுக்குக் கவர்ச்சிகரமான திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையாக இருக்கும்.
தமிழகத்தில் வரும் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிக்குள் சிறு சிறு பிரச்சினைகள் வருவது இயல்பு. அது சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்காது.
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்த பிறகுதான் குழு அமைத்து தொகுதிப் பங்கீடு நடைபெறும். காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்களைக் கொண்டு ஆலோசித்த பிறகுதான் தொகுதிகளைப் பெறுவது குறித்து திமுகவிடம் பேசுவோம்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும்கூட கட்சி நிர்வாகிகளை நியமித்தது சசிகலாதான். கட்சியில் உள்ள அடிமட்ட நிர்வாகிகள் வரை சசிகலாவோடு நேரடித் தொடர்பு உண்டு.
சசிகலா விடுதலையாகி வந்த பிறகு ஒட்டுமொத்த அதிமுகவும் அவரிடம் சென்றுவிடும். ஒட்டுமொத்த அதிமுகவுக்கும் சசிகலாதான் தலைவியாக வருவார். ஆனால், தேர்தலுக்கு முன்பு செல்லுமா, பின்பு செல்லுமா என்பது தெரியாது.
மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளுக்குப் பெரிய வாக்குகள் கிடையாது. கமல்ஹாசனின் மதச்சார்பின்மை போன்ற கருத்தானது காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப்போவதற்கு வாய்ப்புள்ளது. ஆகையால், அவர், திமுக கூட்டணியோடு சேரலாம். எனினும், அவர்தான் அதைப் பற்றி முடிவெடுக்க வேண்டும்.
சினிமாவில் பாட்டு ஆரம்பிக்கும்போது ஏழையாக இருப்பார்கள். பாட்டு முடியும்போது பணக்காரராக வந்துவிடுவார்கள். அது, சினிமாவுக்குச் சாத்தியம். ஆனால், அதுவே அரசியலுக்குச் சாத்தியமில்லை. அதுபோன்று அரசியலிலும் சாதித்து விடலாம் என்று திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் நினைப்பது தவறு”.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT