Published : 18 Jan 2021 03:07 PM
Last Updated : 18 Jan 2021 03:07 PM
தீயணைப்புத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும் என தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர், டிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்தார்.
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர், டிஜிபி சி.சைலேந்திரபாபு உதகையில் உள்ள தீயணைப்பு நிலையத்தை இன்று ஆய்வு செய்தார். பின்னர் தன்னார்வலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தீயணைப்புத்துறை வீரர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள தீ என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது "கடந்த ஆண்டு 21,000 தீயணைப்பு அழைப்புகள் பெறப்பட்டன. ரூ. 279 கோடி மதிப்பிலான பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 30 ஆயிரம் மீட்பு அழைப்புகள் மூலம் 2,200 மக்களைத் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.
ஆபத்தான சூழ்நிலையில் தீயணைப்புத் துறை வீரர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த ஆண்டு 3 வீரர்கள் உயிரிழந்தனர். பெரும்பலூரில் கிணற்றில் விழுந்தவர்களைக் காப்பாற்றிய பின்னர் ஒரு வீரரும், மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தின்போது இரு வீரர்களும் உயிரிழந்தனர்.
ஆடு, மாடு, வனவிலங்குகளை மீட்கும் பணியிலும் தீயணைப்புத்துறை வீரர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். மெரினா கடற்கரையில் மக்களைக் காப்பாற்ற ஒரு மீட்புக் குழு ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு உயிர் காக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அரசால் தீ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்தச் செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். உதவி எனத் தொட்டால், கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு சென்று, அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் உடனடியாக உங்கள் பகுதிக்கு வந்து உதவி செய்வார்கள். தீயணைப்பு வாகனங்களில் டேப், ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதன் மூலம் வீரர்கள் உதவி தேவைப்படும் பகுதிகளைக் கண்டறிந்து செயல்படுகின்றனர். தீயணைப்பு நிலையங்களில் கணினி மற்றும் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு, நவீனப்படுத்தப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்களுக்குப் பயிற்சிதான் முக்கியம்.
நீலகிரி மாதிரியான பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும்போது மீட்புப் பணிகளில் ஈடுபடுவது, மரங்கள் வெட்டுவது ஆகியவற்றுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலங்களில் காட்டுத் தீ ஏற்படுவது தீயணைப்பு வீரர்களுக்குச் சவாலானது. பொறுப்பற்ற நபர்களின் நடவடிக்கையால் தீ ஏற்படுகிறது. குப்பைக்குத் தீ வைப்பதே பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் தீ பரவி காட்டுத் தீயாக மாறுகிறது. எனவே, மக்கள் குப்பை எரிப்பது, புகைப்பிடித்து சிகரெட், பீடி ஆகியவற்றை அணைக்காமல் வீசியேறிவதைத் தவிர்க்க வேண்டும்.
தீயணைப்புத் துறையில் புதிதாகப் பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பயிற்சி முடிந்த பின்னர் தேவையான இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இதனால், ஓராண்டில் தீயணைப்புத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்" என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
ஆய்வின் போது மாவட்டக் காவல்துறை கண்காப்பாளர் வி.சசிமோகன், மாவட்டத் தீயணைப்புத்துறை அதிகாரி சந்திரகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT