Published : 20 Oct 2015 03:18 PM
Last Updated : 20 Oct 2015 03:18 PM

குமரியில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஓட்டை உடைசல் பேருந்துகளில் குடைபிடித்து பயணம்

தமிழகத்தின் கடைக்கோடியில் இருப்பதனாலோ என்னவோ, தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓடி, உருக்குலைந்து போன பேருந்துகளே கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

இம்மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகள் மோசமாக உள்ளது குறித்தும், குறிப்பாக மலை கிராம மக்களின் தவிப்பு குறித்தும், நடுவழியில் இறங்கி பேருந்துகளை பயணிகள் தள்ள வேண்டிய அவலம் குறித்தும், `தி இந்து’ நாளிதழின் `உங்கள் குரல்’ சேவையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். அந்த அளவுக்கு குமரி மாவட்ட பேருந்துகளின் நிலைமை உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் ஓட்டை, உடை சலாகவே உள்ளன. இதனால் பேருந்துகள் நடுவழியிலேயே பழுதாகி நிற்கின்றன. குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள மலையோர வாசிகள் பேருந்து சேவையையே பெரிதும் நம்பியுள்ளனர். ஆனால் இந்த பேருந்துகள் தரம் இல்லாமல் உள்ளதால் விபத்துக்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின் றன.

எப்படி இருந்த ராணித்தோட்டம்!

அரசு போக்குவரத்துக் கழகத் தின் நாகர்கோவில் தலைமைப் பணிமனை ராணித்தோட்டத் தில் இயங்குகிறது. மிகச்சிறந்த பொறியாளர்கள், வடிவமைப்பாளர் கள் பணிபுரிந்த தொழிற்கூடம் இது. பஸ் கட்டமைப்பில் பல் வேறு புதுமைகளை புகுத்தி, தோற்றத்திலும், உறுதியிலும் மிகச் சிறந்த பஸ்களை உருவாக்கி, தமிழக அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்று, அரசு போக்குவரத்துக் கழகத்துக்கே முன்னோடியாகத் திகழ்ந்தது ராணித்தோட்டம் பணிமனை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ராணித்தோட்டம் கம்பீரத்தை இழந்துவிட்டது.

உள்ளூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் கூட முறையாக பராமரிக்கப்படாமலும், தரமான உதிரிப் பாகங்கள் பயன் படுத்தப்படாமலும், பிடிமானம் இல்லாத தேய்ந்த டயர்களுடனும், சீரான பி.டி.ஐ. செக் அப், பிரேக் கண்டிஷன் இல்லாமலும் இயக்கப் படுகின்றன.

உடைந்து போன இருக் கைகள், முதுகை பதம் பார்க்கும் வகையில் தலை நீட்டியுள்ள ஆணி கள், ஒட்டுகள் போட்ட தரைப்பகுதி இதெல்லாம்தான், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடும் பேருந்துகளின் அடையாளம்.

மழை பெய்து விட்டால் அருவி யை நினைவூட்டும் அளவுக்கு பேருந்துகள் ஒழுகுகின்றன. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பேருந்துக்குள் பயணிகள் குடைபிடித்தபடி பயணிக்கின்றனர்.

சிறிது ஏற்றம்

நாகர்கோவில் மண்டல போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, `நாகர்கோவில் மண்டலத்தில் 3 மாதங்களுக்கு முன் பழைய பேருந்துகள் ஒதுக்கப் பட்டு புதிதாக 10 பேருந்துகள் இயக்கப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு 67 பேருந்துகள் வந்துள்ளன. கடந்த வாரம் 100 புதிய டயர்கள் வந்தன.

மாவட்டத்தில் இப்போது 819 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 301 பேருந்துகள் திருநெல்வேலி உள்ளிட்ட வெளி மாவட்டங் களுக்கும், 38 பேருந்துகள் திருவனந்தபுரத்துக்கும், 480 பேருந்துகள் உள்ளூர்களிலும் இயக்கப்படுகின்றன.

10 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை 80 பேருந்துகள் வரை உள்ளன. அவற்றையும் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் இன்னும் கூடுதலாக புதிய பேருந்துகள் வர உள்ளன’ என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x