Published : 17 Jan 2021 08:32 PM
Last Updated : 17 Jan 2021 08:32 PM
காங்கிரஸ்-திமுக கூட்டணியில் தமிழகத்தில் ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்று நாங்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளோம். ஆனால் அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல் சுற்றிலேயே நாங்கள் வென்றுள்ளோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தன்னுடைய துறை ரீதியான 36 கோப்புகளுக்குக் கிரண்பேடி அனுமதி வழங்கவும் அவரைச் சந்திக்க அனுமதிக்கக் கோரியும் கடந்த 10-ம் தேதி முதல் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அங்கேயே படுத்து உறங்கி, உணவு அருந்தியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று இரவு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''ஜனநாயகத்திற்கு எதிராக ஆளுநரை வைத்து ஆட்டிப்படைக்கும் நிலையில் பிரதமர் மோடி உள்ளார் இது புதுவைக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே ஏற்பட்ட ஆபத்து.
புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக தலைமையில் உள்ள இருவர்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது. அது பெரிதில்லை. அதைப் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும். வருத்தம் இருந்தால் சரி செய்வது சிறந்த வழி. அதை முதல்வர் நாராயணசாமி திறமையாக்க கையாள்வார். திமுக தலைவர் ஸ்டாலினுடன் இதுகுறித்துப் பேசி முடிவெடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. புதுச்சேரியில் திமுக கூட்டணி தொடரும். இதுவும் குடும்பம்தான்.
தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகுதான் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசுவோம். தொகுதிப் பங்கீட்டில் கடந்த முறையை விட அதிகம் இடம் பெறுவதா என்பது தற்போது விவாதப் பொருள் இல்லை. . கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 9 இடங்கள் பெற்று 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். 90 சதவீத வெற்றி பெற்றுள்ளோம். திமுக- காங்கிரஸ் கூட்டணி கொள்கை ரீதியில் ஒற்றுமையாக உள்ளது. காங்கிரஸ்-திமுக கூட்டணியில் ஸ்டாலின்தான் முதல்வர் என்று நாங்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளோம்.
ஆனால் அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக நாங்கள் அறிவிப்போம், பாமக முடிவு எடுக்கவில்லை என்கின்றனர். ஓபிஎஸ் இன்னும் தெளிவான வார்த்தை சொல்லவில்லை. பெரிய கூட்டணியில் தங்கள் முதல்வரை முடிவு செய்ய முடியாமல் திணறுகிறார்கள். மாநிலப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. முதல் சுற்றிலேயே நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். நன்றாகப் பேசுவார். வேடிக்கை பார்க்கலாம். யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம். ராகுல் காந்தியின் தற்போதைய பயணம் அரசியல் பயணமல்ல. தமிழ் கலாச்சாரத்தை அறியவே வந்தார். இப்போது தேர்தல் களமல்ல. அதனால் ஸ்டாலினைச் சந்திக்கவில்லை.''
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
பேட்டியின்போது முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT