Published : 17 Jan 2021 04:39 PM
Last Updated : 17 Jan 2021 04:39 PM
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று திருச்சியில் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஜெ.ராதாகிருஷ்ணன், கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, சிறிது நேரம் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
’’தமிழ்நாடு முழுவதும் நேற்று 160 மையங்களில் 3,126 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 6 மையங்களில் 99 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் என மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு வகை முன்களப் பணியாளர்கள் 3,225 பேருக்குக் கரோனா தடுப்பூசிகள் இடப்பட்டன.
தமிழ்நாட்டில் மதுரை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை ஆகியவற்றில் அதிகம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தக்கலை அரசு மருத்துவமனை உட்படச் சில மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
சுகாதாரத் துறை அரசு செயலர், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் என்பதால் முன்களப் பணியாளர் என்ற அடிப்படையில் நானும் இன்று தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன்.
இதற்காக, ஏற்கெனவே நான் எனது பெயரைப் பதிவு செய்திருந்தேன். எனது அடையாள அட்டையை ஆய்வு செய்து, விருப்பப் படிவத்தில் ஒப்புதல் கையொப்பம் பெற்ற பிறகே எனக்கு கோவேக்சின் தடுப்பூசி இடப்பட்டது.
கரோனா தடுப்பூசி போடுவது இலக்கு சார்ந்த திட்டமல்ல. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் இது முக்கிய மைல் கல். குழந்தைகள், முதியவர்கள் என ஏற்கெனவே பல்வேறு தடுப்பூசிகள் நடைமுறையில் உள்ளன. எனவே, கரோனா தடுப்பூசி போடுவதில் எவ்விதப் பாதகமும் நேரிடக் கூடாது என்பதே நோக்கமாக இருந்தது. அதில், வெற்றியும் கிடைத்தது.
ஒரு நாளில் 16,600 பேருக்குக் கரோனோ தடுப்பூசி இடுவதற்கான திறன் சுகாதாரத் துறையிடம் உள்ளது. ஆனால் சுய விருப்பத்தின் பேரில் பெயரைப் பதிவு செய்து, மையங்களுக்கு வந்த 3,225 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மருத்துவக் கல்வி நிலையங்களில் நல்ல வரவேற்பு இருந்தது.
தமிழ்நாடு முழுவதும் இன்றும் 166 மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன. 2-ம் நிலை மருத்துவ நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் படிப்படியாகத் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதுகிறோம்.
மருத்துவத் துறையின் வழிகாட்டுதலின்படி மருத்துவத் துறையினருக்கு முதலில் இந்தத் தடுப்பூசி போடப்படும். இதற்கடுத்து, காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படும். இதற்கு ஜன.25-ம் தேதி வரை பதிவு செய்யலாம்.
அதைத்தொடர்நது, 50 வயதுக்கு அதிகமான மற்றும் 50 வயதுக்கு கீழ் உள்ள- கூட்டு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இடப்படும். கரோனா தடுப்பூசி இட்டுக் கொள்ள மருத்துவத் துறையினர் 4.89 லட்சம் பேரும், காவல் துறையினர் உள்ளிட்ட முன்னிலைப் பணியாளர்கள் 2 லட்சம் பேரும் இதுவரை பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு இறப்பு விகிதம் நன்றாகக் குறைந்துள்ளது. தற்போது போடப்படும் 2 கரோனா தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. கரோனா வைரஸின் 2-வது அலையைத் தடுக்க கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல், அடுத்த சில மாதங்களுக்கு அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’.
இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, அரசு மருத்துவமனை முதல்வர் கே.வனிதா மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT