Published : 17 Jan 2021 02:47 PM
Last Updated : 17 Jan 2021 02:47 PM

பார்வைக்கு குளுமை தரும் பாரம்பரிய ஆத்தங்குடி டைல்ஸ்க்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆத்தங்குடியில் பாரம்பரியமாக கைகளிலேயே வண்ண வண்ண டைல்ஸ்களை தயாரிக்கும் தொழிலாளர்கள்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தயாராகும் ஆத்தங்குடி டைல்ஸ்க்கு (தரைக் கற்கள்) புவிசார் குறியீடு வழங்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது. நகரத்தார்களின் பாரம்பரிய வீடுகள் இன்றும் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன. அவர்களது வீடுகளுக்கு ஆத்தங்குடி டைல்ஸ் மேலும் அழகு சேர்க்கிறது. கலைநயமிக்க இந்த டைல்ஸ்கள் காரைக்குடி அருகே ஆத்தங் குடியில் தயாராகிறது. பாரம்பரிய வீடுகள் நிறைந்த இக்கிராமத்தில் 25 தயாரிப்புக் கூடங்களில் குடிசைத் தொழிலாக டைல்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த டைல்ஸ்கள் இயந்திரப் பயன் பாடின்றி தயாரிக்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த டைல்ஸ் கோடையிலும், குளிர் காலத்திலும் அறையின் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருப்பது தனிச்சிறப்பு. நகரத்தார் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த கற்களை விலை குறைவு, நீண்டகாலம் உழைக்கும் திறன், மங்காத வண்ணம், உடல் நலத்தை பாதிக்காதது போன்ற காரணங்களால் அனைத்துத் தரப்பினரும் உபயோகப்படுத்தத் தொடங்கினர்.

காரைக்குடியில் செட்டிநாட்டு வீடுகளி்ன் தரைத்தளத்தை அலங்கரிக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள்.

இங்கு தயாராகும் டைல்ஸ்கள் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இத்தகைய சிறப்பு மிக்க இந்த டைல்ஸ்களை சிலர் போலியாகத் தயாரித்து ஆத்தங்குடி பெயரில் விற்பனை செய்கின்றனர்.

இதைத் தடுக்க ஆத்தங்குடி கற்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிப்போர், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆத்தங்குடி டைல்ஸ் அசோசியேஷன் தலைவர் ரவி கூறியதாவது: ‘‘ஆத்தங்குடியில் மூன்று தலைமுறைகளாக டைல்ஸ் தயாரித்து வருகிறோம். தற்போது 25 தயாரிப்புக் கூடங்களுக்கு மேல் இங்கு உள்ளன. இத்தொழில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. இப்பகுதியில் கிடைக்கும் மண், சிமென்ட் ஆகியவற்றைக் கலந்து, கைகளால் இயற்கை முறையில் டைல்ஸ் தயாரிக்கிறோம்.

காரைக்குடியில் செட்டிநாட்டு வீடுகளி்ன் தரைத்தளத்தை அலங்கரிக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள்.

இந்தக் கற்களை செட்டிநாடு கல், பூக்கல், கண்ணாடிக்கல் என்று பல பெயர் களில் அழைக்கின்றனர். 8, 10, 12 சதுர அங்குலத்தில் 100-க்கும் மேற்பட்ட பூ வடிவங்களில் தயாரிக்கிறோம். ஆனால் தற்போது வரை ஆத்தங்குடி டைல்ஸ்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு நடவடிக்கை இல்லை. புவிசார் குறியீடு கிடைத்தால் ஆத்தங்குடி கற்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். மேலும் போலிகளும் கட்டுப்படுத்தப்படும். இதனால் புவிசார் குறியீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x