Published : 17 Jan 2021 11:33 AM
Last Updated : 17 Jan 2021 11:33 AM
புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போட சுகாதாரப் பணியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். முதல் நாளான நேற்று 800 பேரில் 274 பேர் மட்டும் ஊசி போட்டுக்கொண்டனர்.
இதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. இச்சூழலில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முதல் கட்டத்தில் அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
நாடு முதல்வதும் கரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். புனே சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு, ஹைதராபாத் பாரத் பயோடெக் தயாரித்த கோவேக்சின் ஆகிய கரோனா தடுப்பூசிகள் போட அனுமதி தரப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு கோவிஷீல்டு தடுப்பூசி 17500 பாட்டில்கள் வந்துள்ளன. புதுச்சேரியில் 8 மையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் நாராயணசாமி நேற்று துவக்கி வைத்தார்.
முதல்கட்டமாக புதுச்சேரியில் 24 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. முதல் கட்டத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோருக்கு போடப்படவுள்ளது. முதல் நாளில் 8 மையங்களில் தலா 100 பேர் வீதம் 800 பேருக்கு கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், புதுச்சேரி மகளிர் குழந்தைகள் மருத்துவமனையில் 10 பேரும், அரசு மருத்துவமனையில் 7 பேரும், இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் 17 பேரும், கரிக்கலாம்பாக்கம் அரசு சுகாதார மையத்தில் 15 பேரும், ஜிப்மரில் 101 பேரும், காரைக்காலில் 15 பேரும், மாஹேயில் 79 பேரும், ஏனாமில் 30 பேரும் என 274 பேர் மட்டுமே ஊசி போட்டுக்கொண்டனர்.
முன்களப்பணியாளர்களே ஊசி போட வராதது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தரப்பில் விசாரித்தபோது, "முதல் நாளில் 800 பேருக்கு ஊசி போட முடிவு செய்யப்பட்டது.
முன்கள பணியாளர்கள்வராததால் அந்தந்த மையங்களில் இருந்து சம்பந்தப்பட்டோருக்கு போன் செய்து அழைத்தனர். பலரும் வரவில்லை. சுமார் 3000 பேருக்கு மேல் போன் செய்தோம். முதல் நாளில் சுகாதார முன்கள பணியாளர்கள் அனைவரும் பணியில் இருந்தும் யாரும் வரவில்லை.
பலரும் வேண்டாம் என்றனர். அதற்பு பதிலாக வெளியூரில் இருப்பதாக அழைப்பு விவரத்தில் குறிப்பிட்டு உள்ளோம். இன்றும் அதே நிலைதான் நீடிக்கிறது." என்று குறிப்பிட்டனர்.
இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், " வெளிநாடுகளில் அரசு நிர்வாகத்தினர், அரசியல்கட்சியினர் முதலில் தடுப்பூசி போடுகின்றனர்.
அதேபோல் இந்தியாவில் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு முதல்கட்டத்தில் தடுப்பூசி போட அனுமதித்தால் மக்கள் நம்பிக்கையுடன் வருவார்கள் மக்களுக்கு கூடுதல் நம்பிக்கை ஏற்படும் ." என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT