Published : 17 Jan 2021 08:36 AM
Last Updated : 17 Jan 2021 08:36 AM
பொங்கல் நன்னாளில் புதியதிரைப் படங்கள், தொலைக் காட்சிகளில் நடிகர், நடிகையரின் நேர்காணல்கள் என நம்முடைய கலை ரசனை வேறு மாதிரியாக மாறி விட்ட சூழலில், கலை இலக்கிய வடிவிலான நம் மரபு, பண்பாட்டு விழுமியங்களை மீட்டெடுத்து மேடையேற்றும் விதமாக கடந்த 13-ம் தேதி மாலை செஞ்சியில் 9-ம் ஆண்டாக ‘குறிஞ்சி விழா’ நடைபெற்றது.
இவ்விழாவை குறிஞ்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் துரை. திரு நாவுக்கரசு, ஜெ.ராதாகிருஷ்ணன், செந்தில்பாலா, செஞ்சி தமிழினியன், சு.உதயகுமார், மு.தண்டபாணி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இவ்விழாவில், `மூவா மருந்து’ என்ற தலைப்பில் தனிப்பொழிவாக கதைசொல்லி எழுத்தாளர் பவா செல்ல துரை உரையாற்றினார். களரிக் கூட்டு என்ற பெயரில் திருவண்ணாமலை துறிஞ்சை ஜமாவின் பெரிய மேளம் பார்வையாளர்களை ஒருநிலைப் படுத்தியது.
இதனைத் தொடர்ந்து நாட்டுப்புற கலைக்கதம்பமாக கலை கிராமம் விருது பெற்ற நல்லாண்பிள்ளை பெற்றாள் மகளிர் குழு வழங்கும் கும்மி- கோலாட்டம், தெருக்கூத்தாக கீதாஞ்சலி நாடக மன்றம் வழங்கும் இரணியன் தெருக்கூத்து நடைபெற, அனைத்து நிகழ்வுகளும் பார்வையாளர்களை கட்டிப் போட்டது. இரணியன் தெருக்கூத்தை நடத்திய கீதாஞ்சலி நாடக மன்ற அமைப்பாளர் ஏ.நா.தி.ரவியிடம் இது குறித்து பேசினோம். “எனது குடும்பத்தின் நான்காம் தலைமுறைக் கலைஞன் நான். எனது தாத்தா, எனது அப்பா, பிறகு எனது அண்ணார், மற்றும் என்னைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்டு, முழுவதும் தெருக்கூத்தை அடிப்படையாகக் கொண்டு இக்குழுவை நடத்தி வருகிறோம். பாரம் பரியமான இக் கலை அழிந்துவிடக் கூடாது, என்ற முனைப்பில் இதை செய்து வருகிறோம்.
நாங்கள் வெளியே சென்று இத்தெருக் கூத்தை நடத்துவதன் பயனாக ‘நல்லாண் பிள்ளை பெற்றாள் கலை கிராமம்’ என்ற விருதையும் எங்கள் குழு பெற்றுள்ளது. செஞ்சியில் ‘இரணிய சம்ஹாரம்’ என்னும் தெருக்கூத்தை ஒரு மணி நேரமாக சுருக்கி நடத்தினோம். இத்தெருக் கூத்து கலை அழிந்து விடக் கூடாது என்று என் மனைவி தலை மையில் நாட்டுப்புற நாட்டிய மகளிர் குழுவினையும் நடத்தி வருகிறோம். இக்குழுவினரும் குறிஞ்சி அமைப்பு நடத்திய விழாவில் பங்கு பெற்று கிராமிய பாடல்களுக்கு கோலாட்டம் நடத்தினர்.எங்களது குடும்பமே ஒரு கலைக் குடும்பம். நம் பண்பாடு சார்ந்த இந்த கலைகளுக்காகவே எங்களை அர்ப்பணித்துள்ளோம்.
இதில், பெரிய வருமானம் கிடையாது. ஆனால், மனநிறைவு இருக்கிறது. விவசாயப் பணி இருக்கிறது. உப தொழிலாக தேநீர் கடை நடத்தி வருகிறேன். வயிற்றுப் பாட்டுக்கான எங்களது தொழிலுக்கு எந்த இடையூறும் இல்லா மல் இந்தப் பாடும் (இந்த கலையும்) நடக்க வேண்டும். மேலும் மேலும் எல்லோருக்கும் இது போய் சேர்ந்திட வேண்டும்” என்கிறார் கீதாஞ்சலி நாடக மன்ற அமைப்பாளர் ஏ.நா.தி.ரவி. இந்தக் குழுவினரைப் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினர், நடிகர் நாசர், இசையமைப்பாளர் தேவா போன்றோர் பாராட்டியுள்ளனர். “தமிழக அரசு கலை சார் நிகழ்வுகளில் தொடர்ந்து எங்களைப் பயன்படுத்த வேண்டும்; எங்களுக்கான ஓய்வூதியத்தை அரசு தர வேண்டும்” என்கின்றனர் இக்கலைஞர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT