Published : 17 Jan 2021 08:36 AM
Last Updated : 17 Jan 2021 08:36 AM
“முதல் நாள் ஒரு கையை வெட்டுங்கள், மறுநாள் மற்றொரு கை, அடுத்து மார்பு, அதன் பின் முதுகு சதையை கிழி, பிறகு மூக்கறு, பின்னர் காதுகள், இடையிடையே வெந்நீரை ஊற்று, பின் குதிகாலை கொளுத்துக”இப்படி ஒரு தீர்ப்பைச் சொன்னது செஞ்சியை ஆண்ட விரத்திற்கும் தீரத்திற்கும் பேர் போன ராஜா தேசிங்கு...
“மன்னராட்சியில் குற்றவாளிகளுக்கு கொடும் தண்டனை கொடுப்பது வழக்கம்தானே..!“ என்கிறீர்களா..! அதுதான் இல்லை... டெல்லியில் பாதுஷா ஷா ஆலம் ஆட்சி; அப்போது ஆற்காடு நவாப்பின் கட்டுபாட்டில் செஞ்சி. செஞ்சி பாளையப்பட்டின் தலைவன் தேசிங்கு. இவர்தான் இப்போதும் ராஜா தேசிங்கு என அழைக்கப்படுகிறார்.
இவரின் வீரத்தைப்பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவரின் ஆட்சியில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்...? அதைச் சொல்கிறது இந்த தமிழச்சியின் கதை. ராஜா தேசிங்குவின் சிப்பாய்களுக்கு தலைவர்கள் இருப்பார்கள். அப்படி ஒரு சிப்பாயின் பெயர் சுதரிசன் சிங். அவனின் நண்பன் ரஞ்சித் சிங். இவர்கள் இருவரும் புதுச்சேரி சென்று வரும்போது வளவனுாரில் இளைப்பாறுகிறார்கள்.
அப்போது திம்மன் என்ற தமிழன் உபசரித்து இளநீர் கொடுக்கிறான். பின்னர் உணவளிக்கிறான். உணவு பரிமாறும் போது திம்மனின் மனைவி சுப்பம்மாவை கண்ட சுதரிசன் சிங் அவள் அழகில் மயங்குகிறான். அவளை அடைய திட்டமிட்ட சுதரிசன் சிங் திம்மனிடம், “செஞ்சி கோட்டையில் சிப்பாய் வேலை வாங்கித் தருகிறேன்” என ஆசை வார்த்தை கூறி, அப்போதே திம்மனையும், சுப்பம்மாவையும் செஞ்சிக்கு அழைத்துச்செல்கிறான்.
இரவு நேரமாகிறது... குதிரையில் சுதரிசன் சிங்கும், ரஞ்சித் சிங்கும் முன்னே செல்ல, மாட்டு வண்டியில் திம்மனும் சுப்பம்மாவும் செல்கின்றனர்.
அப்போது வழிமறித்த கிராம மக்கள் திம்மனிடம், ‘எங்கு செல்கிறாய்?’ என கேட்க, திம்மன் செஞ்சிக்கு போவதாக கூற, தவறான முடிவெடுப்பதாக கிராமத்தினர் தடுக்க, அதையும் மீறி திம்மன் செஞ்சிக்கு செல்வதில் ஆர்வமாக இருக்கிறான். இதற்கிடையே, தங்களை எச்சரித்த தன் கிராமத்தினரிடம் இருந்து, திம்மனுக்கு தெரியாமல் சுப்பம்மா ஒரு கத்தியை வாங்கிக் கொள்கிறாள்.
செஞ்சியில் ஒரு குடிசையில் சுப்பம்மாவை தங்க வைத்துவிட்டு, திம்மனை கோட்டைக்கு அழைத்துச் சென்று ஓரிடத்தில் விட்டுவிட்டு, மீண்டும் குடிசைக்கு வந்த சுதரிசன் சிங் தன் ஆசைக்கு ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்துகிறான். சுப்பம்மா ஒப்புக்கொள்ளாததால் அவளை உள்ளே வைத்து குடிசையை சுதரிசன் சிங் கொளுத்துகிறான். ஆனால், சுப்பம்மா உயிர் தப்புகிறாள். அதே பகுதியில் வேறொரு வீட்டில் அடைக்கலம் புகுந்த சுப்பம்மாவிற்கு தனது கைக்கூலி மூலம் மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்த சுதரிசன் சிங் சுப்பம்மாவை அடைகிறான். மயக்கம் தெளிந்த சுப்பம்மா, சுதரிசனை தேடிப் பிடித்து தான் வைத்திருந்த கத்தியால் குத்தி கொல்கிறாள்.
சுதரிசன் சிங் கொல்லப்பட்ட செய்தி அறிந்து, ராஜா தேசிங்கு நேரில் விசாரிக்கிறான்.அங்கி ருந்த ரஞ்சித்சிங் சுப்பம்மாதான் சுதரிசன் சிங்கை கொன்றாள் என்கிறான். அங்கிருந்து தப்பிய சுப்பம்மா கோட்டையில் திம்மனை கண்டு பிடிக்க, இருவரும் அங்கிருந்து தப்ப முயல்கின்றனர். ஆனால், சிப்பாய் கூட்டம் திம்மனையும் சுப்பம் மாவையும் கண்டுபிடிக்கிறது. அப்போது ஏற்பட்ட சண்டையில் திம்மன் கொல்லப்படுகிறான்.
ராஜா தேசிங்குவின் அரசவை... கூடியிருந்த அவையினர் மத்தியில், பிடிபட்ட சுப்பம்மாவின் தன்னிலை விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத ராஜா தேசிங்கு, “முதல் நாள் ஒரு கையை வெட்டுங்கள், மறுநாள் மற்றொரு கை, அடுத்து மார்பு, அதன் பின் முதுகு சதையை கிழி, பிறகு மூக்கறு, பின்னர் காதுகள், இடையிடையே வெந்நீரை ஊற்று, பின் குதிகாலை கொளுத்துக” என்று தீர்ப்பளிக்கிறான். இதை கேட்ட சுப்பம்மா, தன் மூச்சை இயங்காது சுயகட்டுப்பாட்டால் நிறுத்தி இறக்கிறாள். செஞ்சிக் கோட்டை வரலாற்றின் கோர அத்தியாயம் இது. இதை பாவேந்தர் பாரதிதாசன் தனது, ‘தமிழச்சியின் கத்தி‘ என்ற கவிதை நுாலில் விவரித்துள்ளார். இந்நுாலை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT