Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

மொத்த தேவையான ரூ.4,445 கோடியில் ரூ.450 கோடி மட்டுமே ஒதுக்கீடு; தமிழகத்தின் 9 புதிய ரயில்பாதை திட்டங்கள் புத்துயிர் பெறுமா?- மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு

சென்னை

தமிழகத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் 9 புதிய ரயில்பாதை திட்டங்கள் புத்துயிர் பெற, வரும் 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாட்டில் நகரமயமாக்கல் வேகமாக அதிகரித்து வருவதால், பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு வசதியின் தேவை பல மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகம் போன்ற மாநிலங்களில் சொந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே, பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் அவசியமாகியுள்ளது. அதிலும், ரயில் போக்குவரத்து மிகவும் அவசியமானதாக உள்ளது. இதற்கிடையே, மத்திய அரசின் 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்தந்த மாநிலங்களில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள் குறித்து ரயில்வே திட்டப்பட்டியலை மாநில அரசுகள் தயார் செய்து வருகின்றன. இதேபோல், ரயில்வே மண்டலங்களும், ரயில்வே திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்துஅறிக்கையை தயாரித்து ரயில்வே வாரியத்துக்கு அளித்து வருகின்றன.

தமிழகத்தில் பிரதானமான சென்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதை திட்டம் கடந்த 1998-ம் ஆண்டு தொடங்கியது. மெதுவாக நடைபெற்று வந்த இந்தப் பணி தற்போது மதுரை வரை முடிந்துள்ளது. அடுத்தகட்டமாக மதுரை - கன்னியாகுமரி வரையில் மின்மயமாக்கலுடன் இரட்டை பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இரட்டை பாதை பணிகள் 2022-க்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே, இத்திட்டத்தை விரைந்து முடிக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியமாகும்.

கிடப்பில் 9 திட்டங்கள்

தமிழகத்தில் பல்வேறு ரயில் போக்குவரத்து திட்டங்களை ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் சென்னை - மாமல்லபுரம் - கடலூர்(179 கி.மீ), திண்டிவனம் - செஞ்சி- திருவண்ணாமலை (70 கி.மீ), திண்டிவனம் - நகரி (179 கி.மீ) அத்திப்பட்டு - புத்தூர் (88 கி.மீ), ஈரோடு - பழநி (91 கி.மீ), மதுரை - அருப்புக்கோட்டை (143 கி.மீ), பெரும்புதூர் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி (60 கி.மீ), மொரப்பூர் - தருமபுரி (36 கி.மீ), ராமேசுவரம் - தனுஷ்கோடி (17 கி.மீ) உட்பட 9 ரயில் திட்டங்களும் செயல்பாட்டில் இருக்கின்றன.

இந்த திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ.4,445 கோடியாகும். ஆனால், மேற்கண்ட திட்டங்களுக்கு இதுவரை ரூ.450 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, மேற்கண்ட ரயில்வே திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் நிதிஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

மாநில அரசின் பங்களிப்பு

மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த அந்தந்த மாநில அரசுகள் ரயில்வேயுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. அதன் அடிப்படையில், தெற்கு ரயில்வே எல்லைக்கு உட்பட்ட கேரள மாநிலத்தில் 116 கி.மீ தொலைவுகொண்ட அங்காலி - சபரிமலை திட்டத்தை அந்த மாநில அரசின் பங்களிப்போடு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 50 சதவீத செலவை ஏற்றுக் கொள்ள அந்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அந்த ரயில் திட்டப் பணிகள் வேகமெடுத்துள்ளன. எனவே, தமிழகத்தில் முக்கியமான ரயில்வே திட்டங்களையும் விரைவாக செயல்படுத்த தமிழக அரசும் ரயில்வேயுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2 லட்சம் காலிப் பணியிடங்கள்

இதுதொடர்பாக டிஆர்இயு துணைப்பொதுச் செயலாளர் மனோகரன் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கால் வருவாய் இழப்பை ஈடுசெய்யும்வகையில் ரயில்வே ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு முடக்கப்பட்டிருந்தது. எனவே, அகவிலைப்படி நிலுவைத் தொகையும் வழங்க வேண்டும். இதேபோல், ரயில்வேயில் உள்ள 2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், ரயில்வேகுடியிருப்புகள், மருத்துவமனைகளை மேம்படுத்த போதிய நிதி ஒதுக்கீடுசெய்ய வேண்டும். தனியார் பயணிகள்ரயில்களால் கட்டணம் பல மடங்கு உயரும் அபாயம் இருப்பதால், தனியார்ரயில்கள் இயக்கும் முடிவைக் கைவிட வேண்டும்’’ என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x