Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM
ஒருங்கிணைந்த காஞ்சி மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி. தற்போது இந்த ஏரி செங்கல்பட்டு மாவட்டத்திலும், காஞ்சி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. 2,908 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 2231.48 ஏக்கர் அளவில் நீர் பரவியிருக்கும். மேலும் 695 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்ட இந்த ஏரிக்கு ஆரணி, செய்யூர், உத்திரமேரூர் பகுதிகளில் இருந்து கிளியாறு வழியாகத் தண்ணீர் வருகிறது.
இந்த ஏரியின் மூலம் 26 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம்ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. கடைசியாக 1968-ம் ஆண்டு தூர்வாரப்பட்டதற்குப் பிறகு இந்த ஏரி தூர்வாரப்படவில்லை. இதனால்கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், தூர்ந்தும் விவசாய பரப்புகள் குறைந்துவிட்டன. எனவே, இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாய சங்கங்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து கடந்த செப்.11-ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் பழனிசாமி, மதுராந்தகம் ஏரி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மதுராந்தகம் ஏரி தூர்வாரும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஏரியில் தூர்வாரும் பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையில் ஏரி நிரம்பிவிட்டது. இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிலபொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, மதுராந்தகம் ஏரியை தூர் வாருவதற்கு ரூ.125 கோடி அளவில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பியுள்ளோம்.
ஏரியில் தூர்வாருவதுடன் ஏரிக்கு வரும் வரத்து கால்வாய்கள், பாசன கால்வாய்களையும் தூர்வாருவது, புதிய ஷட்டர்களுடன் கூடிய மிகப் பெரிய மதகுகளை அமைப்பது ஆகியவையும் இத்திட்டத்தில் அடங்கும். ஆனால் இதுதொடர் பாக இன்னும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, சிறப்பு நிதி ஏதும் ஒதுக்கப்படாததால் தூர் வாரும் பணிகள் தொடங்கப்படவில்லை என்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.நேருவிடம் கேட்டபோது, எங்கள் சங்கம் சார்பாக 2 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம், இப்போதாவது இந்த ஏரியை தூர்வார அரசாணை பிறப்பித்து, நிதி ஒதுக்கி முதல்கட்டமாக வரத்து வாய்க்கால்களை சரிசெய்ய வேண்டும்.அதையடுத்து ஏரியில் நீர் குறைந்தப் பிறகு, ஏரியை தூர்வார வேண்டும். தூர் வாரும் மண்ணை ஏரிக் கரையின்யின் மீது கொட்டாமல், விவசாயிகள், தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள இலவசமாக வழங்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT