Published : 16 Jan 2021 06:46 PM
Last Updated : 16 Jan 2021 06:46 PM
வீட்டுக்குத் தெரியாமல் பணிபுரியும் இடத்தில் இருந்து வந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர், 12 காளைகளை அடக்கி கார் பரிசாக பெற்ற நெகிழ்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்திலே தலைசிறந்த காளைகள் அனைத்தும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் அவிழ்க்கப்படுகின்றன.
மற்ற போட்டிகளைப் போல் இல்லாமல் இந்த ஜல்லிக்கட்டில் அவிழ்க்கும் காளைகளை அடக்குவது மாடுபிடி வீரர்களுக்கு அவ்வளவு எளிதானது அல்ல. அந்தளவுக்கு காளைகள் வலுவாகவும், ஆக்ரோஷமாகவும் நின்று விளையாடும்.
இந்நிலையில் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் 13 லட்சம் ரூபாய் காளை, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ஆர்.ராஜசேகர் காளை, இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் காளை உள்ளிட்ட முக்கிய பிரமுகரின் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த சிறந்த காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
அதனால், பல காளைகளை வீரர்கள் நெருங்க முடியாமல் திண்டாடினர். நெருங்கிய வீரர்களை அந்த காளைகள் தூக்கி வீசி பந்தாடியதில் இந்த ஆண்டு 55 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு சில வீரர்கள் மட்டுமே சரியாக கனித்து காளைகளை அடக்கினர். அவர்களில் மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த கண்ணன் 12 காளைகளை அடக்கி முதல் பரிசான காரைப் பெற்றார்.
கார் பரிசு பெற்ற 24 வயது மதுரை விராட்டிப்பத்தை சேர்ந்த சி.கண்ணன் (12 காளைகளை அடக்கி முதல் பரிசு பெற்றவர்) பேசுகையில், ‘‘நான் சென்னையில் ஓட்டுனராக வேலை பா்ரக்கிறேன். 14 ஆண்டுகளாக மாடுபிடிக்கிறேன்.
இதுவரை தங்கக் காசு, மிக்ஸி, கிரைண்டர் சிறிய அளவிலான பரிசுகளைதான் பெற்றேன். வீட்டில் 5 பால் மாடுகள் வளர்க்கிறேன். மாடு வளர்ப்பபதற்கு தூண்டுகோலாக இருப்பவர் எனது தாயார். அவரது கையால் முதல்வரிடம் கார் பரிசு பெற ஆசைப்படுகிறேன். கடந்த சில ஆண்டாக மாடுபிடிக்க சென்றாலே வீட்டில் பயப்படுகிறார்கள்.
அதனாலே, வீட்டிற்குத் தெரியாமல் சென்னையில் இருந்து வந்து இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றேன். முதல் பரிசு பெற்றதை அறிந்த எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சொல்ல முடியாத அளவிற்கு சந்தோசமாக உள்ளேன்.
மிகுந்த சோர்வடைந்ததால் கடைசி சுற்றில் மேலும் 5 காளைகளை அடக்க முடியாமல் போனது. சிறந்த மாடுபிடி வீரராக பரிசு பெற வேண்டும் என்ற என்னோட பல ஆண்டு கனவு தற்போதுதான் நிறைவேறியுள்ளது, ’’ என்றார்.
சிறந்த காளை உரிமையாளர் சந்தோஷ் கூறுகையில், ‘‘வியாபாரம் செய்கிறேன். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது என்னுடைய பொழுதுப்போக்கு. 8 காளைகளை வளர்க்கிறேன். 2019ம் ஆண்டில் இதே ஜல்லிக்கட்டில் காளையை அவிழ்த்து பரிசு பெற்றேன்.
2020ம் ஆண்டில் டோக்கன் கிடைக்காமல் காளையை அவிழ்க்க முடியவில்லை. இந்த ஆண்டும் டோக்கன் கிடைத்தும் வரிசையில் கடைசியாக நின்றதால் அவிழ்க்க முடியாதோ என்று பதட்டமடைந்தேன். போட்டி 4 மணிக்கு முடிந்திருந்தால் என்னோட காளையை அவிழ்த்து இருக்க முடியாது. ஒரு மணி நேரம் நீடித்தால் கடைசியாகதான் என்னோட காளை இறக்கப்பட்டது. பிறவாடி, தளவாடி, தள்ளுவாடி போன்ற முறையால் காளைகளை இடையில் செருகும் முறைகளை தடுக்க வேண்டும்.
அதை முறைப்படுத்தி காளை அவிழ்ப்பில் நடக்கும் பிரச்சனைகளால் என்னைப் போன்ற சாமானியர்கள் காளைகளை அவிழ்க்க முடியாமல் போகிறது. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT