Published : 16 Jan 2021 06:35 PM
Last Updated : 16 Jan 2021 06:35 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் 4 மையங்களில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. முதல் நாளில் 480 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு கரோனா தடுப்பு மருந்துகளுக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியது. இதையடுத்து முதல் கட்டமாக கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2 மற்றும் 8 தேத்திகளில் ஒத்திகை முகாம்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து முன்களப் பணியாளர்களுக்கு ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசிகள் போடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஏற்கனவே அறிவித்தப்படி நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், மதுரையில் தமிழக முதல்வர் கே.பழனிச்சாமியும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி சுகாதார மாவட்டத்துக்கு 9,300 டோஸ் தடுப்பூசி மருந்துகளும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கு 3,800 டோஸ் தடுப்பூசி மருந்துகளும் வரப்பெற்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை, கோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனை, புதுக்கோட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று ஒவ்வொரு மையத்திலும் தலா 120 பேர் என மொத்தம் 480 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் வழிக்காட்டுதலின்படி பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்ததன் மூலம் கரோனா தொற்று தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கரோனா தொற்றுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதற்காக கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மதுரையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக சுகாதாரத் துறையை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சுகாதாரத் துறையல்லாத மற்ற அரசுத்துறைகளான காவல் துறை, வருவாய்துறை அதிகாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. கரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது .
கரோன தடுப்பூசி விஞ்ஞானி மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி இருமுறை போட வேண்டிய தடுப்பூசியாகும். ஒரு முறை போட்டப்பின்பு 28 நாட்கள் கழித்து அதே நபருக்கு, அதே மையத்தில் அடுத்த டோஸ் தடுப்பூசி போடப்படும். ஒவ்வொரு முறையும் 0.5 மிலி அளவுக்கு மருந்து போடப்படும் என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் முருகையா, துணை இயக்குநர் (கோவில்பட்டி) கீதா, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் பொன்ரவி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தனப்பிரியா மற்றும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை ஊழியர் முருகபெருமாளுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது. டீன் ரேவதி பாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, துணை கண்காணிப்பாளர் குமரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, மருத்துவ துறை இணை பேராசிரியர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT