Published : 16 Jan 2021 04:27 PM
Last Updated : 16 Jan 2021 04:27 PM
சோ, தனது இறுதி மூச்சு வரை கடுமையான விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடும் நாகரிக எல்லையைத் தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர், துக்ளக் ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோவின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் விமர்சகராக, துக்ளக் இதழின் நிறுவன ஆசிரியராக இருந்த சோ, தனது இறுதி மூச்சு வரை கடுமையான விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடும் நாகரிக எல்லையைத் தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர்.
அவரைத் தனது ஆசானாகச் சொல்லிக்கொண்டு, துக்ளக் ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோவின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது.
கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல.
துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது”.
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT