Published : 10 Oct 2015 07:50 AM
Last Updated : 10 Oct 2015 07:50 AM
ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் யுவராஜின் வீடு மற்றும் அவரது மாமியார், பெற்றோர் வீடுகளில் நேற்று சிபிசிஐடி போலீஸார் சோதனை செய்தனர். அப்போது யுவராஜின் மனைவி சுவீதாவின் செல்போனை போலீஸார் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ்(24). அவரைக் கடத்திக் கொலை செய்து, ரயில்வே தண்டவாளத்தில் உடல் வீசப்பட்டது. இந்தக் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலைமையில் ஏடிஎஸ்பி ஸ்டாலின், டிஎஸ்பி வேலன், காவல் ஆய்வாளர் பிருந்தா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த திருச்செங்கோடு மற்றும் பள்ளிப்பாளையம் போலீஸார், கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன் ஆகி யோரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
5 பேருக்கு ஜாமீன்
இந்த வழக்கில் ஏற்கெனவே 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளனர். அவர்கள் தினமும் நாமக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். கொலை வழக்கு தொடர்பாக போலீஸாரால் தேடப்பட்டு வரும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவரும், ரிக் அதிபரு மான யுவராஜ் தலைமறைவாக உள்ளார்.
அவர் வாட்ஸ்அப் மூலம் போலீஸாருக்கும், பேரவை யினருக்கும் தகவல் தெரிவித்து வருகிறார். விரைவில் சரண் அடைவதாக தொலைக்காட்சி பேட்டியில் யுவராஜ் பேசியதை அடுத்து, அவரை பிடிக்க 3 தனிப்படை அமைத்து சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர்.
யுவராஜுக்கு நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை சிபிசிஐடி ஏடிஎஸ்பி ஸ்டாலின், டிஎஸ்பி வேலன் தலைமையிலான போலீஸார் சங்ககிரியை அடுத்த ஆவாரம்பாளையத்தில் உள்ள யுவராஜின் மாமியார் பாப்பா வீட்டில் சோதனை செய்தனர். வீடுகளில் உள்ள பீரோ, அறைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனையிட்டனர். இதுகுறித்து யுவராஜ் மாமியார் பாப்பா கூறும்போது, ‘காலையில் 9 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர். வீட்டில் இருந்த கேமிராவை கழற்றிக் கொண்டனர். எங்களிடம் எதுவும் விசாரிக்கவில்லை’ என்றார்.
சிபிசிஐடி காவல் ஆய்வாளர் பிருந்தா தலைமையிலான போலீ ஸார் சங்ககிரி கெமிக்கல் பிரிவு பகுதியில் உள்ள யுவராஜின் மனைவி சுவீதா வீட்டிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீட்டில் உள்ள அனைத்து அறைகள், பீரோ, மேஜை டிராயர்உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். சுவீதாவின் செல்போனை போலீஸார் பறிமுதல் செய்து கொண்டனர். இதுதவிர சங்ககிரியை அடுத்த கரும்பாலிக்காடு பகுதியில் உள்ள யுவராஜின் பெற்றோர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
3 தனிப்படை போலீஸார் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். யுவராஜ் வீட்டில் ஆயுதங்கள் உள்ளதா, அவர் பதுங்கி இருக்கும் இடம் குறித்து ஆவணங்கள் உள்ளதா, கோகுல்ராஜ் கொலை வழக்கு சம்பந்தமாக ஆதாரங்கள் உள்ளனவா என பல்வேறு கோணங் களில் சிபிசிஐடி போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT