Last Updated : 15 Jan, 2021 05:39 PM

 

Published : 15 Jan 2021 05:39 PM
Last Updated : 15 Jan 2021 05:39 PM

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் நீடிக்கும் மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் தாமிரபரணி கரையோரப் பகுதி குடியிருப்புகள், விளைநிலங்கள், அணைக்கட்டுகள், ஆற்றங்கரைகள், அருவிகளுக்கு செல்ல தடை நீடிப்பு

திருநெல்வேலி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை நீடிக்கும் நிலையில் தாமிரபரணியில் 7-வது நாளாக இன்றும் வெள்ளம் பெருக்கெடுத்தது.

இதனால் ஆற்றங்கரையோர தாழ்வான குடியிருப்புகளும், நெல், வாழை பயிரிட்டுள்ள விளைநிலங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் நீடிக்கும் மழையால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு வரும் உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி இந்த இரு அணைகளில் இருந்தும் 17369 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டிருந்தது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 11194 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து 11060 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 9592 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து 8981 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மாவட்டத்தில் தற்போது பாபநாசம், மணிமுத்தாறு, வடக்குபச்சையாறு, நம்பியாறு ஆகிய 4அணைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு, கொடுமுடியாறு அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.

அணைகளில் இருந்து உபரியாக வெளியேற்றப்படும் தண்ணீர் தாமிரபரணியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று 7-வது நாளாக தாமிரபரணியில் வெள்ளம் நீடித்தது. இதனால் ஆற்றங்கரைகளில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும், நெல் மற்றும் வாழைகள் பயிரிட்டுள்ள விளைநிலங்களையும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.

திருநெல்வேலி அருகே கொண்டாநகரம், கோடகநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர்களையும், வாழைகளையும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. சேதமடைந்துள்ள நெல், வாழை உள்ளிட்ட பயிர்களின் விவரங்கள் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகிறார்கள்.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளும், தென்காசி மாவட்டத்தில் கடனா மற்றும் ராமநதி அணைகளும் நிரம்பியிருப்பதால் இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு நிமித்தம் ஆற்றுக்கு சென்று குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதி கிடையாது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் வெள்ளப்பெருக்கு தணியும்வரை தங்கியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி- திருச்செந்தூர் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அவ்வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் வசவப்பபுரம் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.

மழையளவு:

மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் நேற்று காலை 8 மணியுன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 68, சேர்வலாறு- 27, மணிமுத்தாறு- 62, நம்பியாறு- 13, கொடுமுடியாறு- 10, அம்பாசமுத்திரம்- 42, சேரன்மகாதேவி- 42, நாங்குநேரி- 12, ராதாபுரம்- 8, பாளையங்கோட்டை- 24, திருநெல்வேலி- 13.80.

காவல்துறை எச்சரிக்கை:

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியிருப்பதால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து முழுவதும் அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி காணும்பொங்கல் அன்றும், தொடர்விடுமுறை நாட்களிலும் அணைக்கட்டுகள், ஆற்றங்கரையோர பகுதிகள், நீர்நிலைப்பகுதிகளில் செல்ல அனுமதியில்லை. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மீறினால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x