Published : 15 Jan 2021 03:40 PM
Last Updated : 15 Jan 2021 03:40 PM
தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரம் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
இதையடுத்து குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் இன்று ஒரே நாளில் 4 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் கனமழை:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 13-ம் தேதி பிற்பகலில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன் பிறகும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்கனவே மாநகர பகுதிகள் முழுவதும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு பொதுமக்கள், ஒரு மாதத்துக்கு மேலாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த மழை வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி வந்த நேரத்தில், மீண்டும் கனமழை பெய்ததால், தூத்துக்குடி மாநகரம் மீண்டும் பழையபடி வெள்ளக்காடாக மாறியுள்ளது.
தத்தளிக்கும் தூத்துக்குடி:
தூத்துக்குடி சிதம்பரநகர், பிரையண்ட் நகர், போல்டன்புரம், மாசிலாமணிபுரம், அண்ணாநகர், டூவிபுரம், லூர்தம்மாள்புரம், பூபால்ராயர்புரம், செயின்ட் மேரீஸ் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, கேடிசி நகர், ஹவுசிங் போர்டு காலனி, செல்வநாயகபுரம், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்திநகர், தபால் தந்தி காலனி, ஆசிரியர் காலனி, கதிர்வேல் நகர், ராஜீவ் நகர், கால்டுவெல் காலனி, வெற்றிவேல்புரம், சாமுவேல்புரம், சின்னக்கண்ணுபுரம், பாத்திமாநகர், முத்தையாபுரம், அத்திரமரப்பட்டி, குறிஞ்சிநகர் உள்ள நகரின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
நகரின் பெரும்பாலான தெருக்கள், சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். குறிப்பாக ஜார்ஜ் சாலை - திருச்செந்தூர் சாலை சந்திப்பு பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியிருப்பதால் அந்த வழியாக செல்வோர் திண்டாடி வருகின்றனர். நகரில் பிரதான சாலைகளை தவிர அனைத்து பகுதிகளிலும் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கிறது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், மருத்துவமனை வளாகத்திலும் மழைநீர் பெருமளவில் தேங்கி நிற்பதால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் பெருமளவில் தேங்கி நிற்கிறது. தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையம் மழைநீர் தேங்கி சகதிக்காடாக மாறியிருப்பதால் பயணிகள் திண்டாடி வருகின்றனர்.
தூத்துக்குடி சி.வா.அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பெரும்பாலான பள்ளி வளாகங்களில் மழைநீர் வகுப்பறைகளை சூழந்து குளம்போல தேங்கி நிற்கிறது. வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளிகளை திறப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் 125 ராட்சத மோட்டார்கள் பொருத்தப்பட்டு மழைநீரை வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.
4 இடங்களில் மறியல்:
இதற்கிடையே குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழந்ததால் பாதிப்படைந்த மக்கள் நகரில் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி பிரையண்ட் நகர் 12-வது தெரு கட்டப்பொம்மன் நகர் பகுதியில் தெருக்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி மக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் பிரையண்ட் நகர் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் பெ.கீதாஜீவன் பொதுமக்களுக்கு ஆதரவாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதேபோல் பிரையண்ட் நகர் 1-வது தெரு பகுதி மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கால்டுவெல் காலனி பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோன்று தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதி மக்கள் எட்டயபுரம் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிறகே பொதுமக்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT