Published : 15 Jan 2021 02:38 PM
Last Updated : 15 Jan 2021 02:38 PM
"திமுக தலைமையில் புதுச்சேரியில் கூட்டணி அமைக்க உள்ளோம். எந்தக் கட்சி வந்தாலும் திமுகதான் தலைமை தாங்கும்" என்று திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தெரிவித்தார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், கூட்டணிக் கட்சியான திமுகவுக்கும் இடையில் கடும் மோதல் நிலவி வந்தது. காங்கிரஸ் கூட்டிய கூட்டங்கள், போராட்டங்களை திமுக முற்றிலும் புறக்கணித்தது. அதைத் தொடர்ந்து முதல்வர், அமைச்சர்களைக் கடுமையாக திமுகவினர் விமர்சிக்கத் தொடங்கினர். இந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலிருந்து திமுக விலகும் என்று வெளிப்படையாக அனைவரும் பேசத் தொடங்கியுள்ளனர்.
இச்சூழலில் புதுச்சேரி திமுக தெற்கு மாநிலத் தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற திருவள்ளுவர் தின நிகழ்ச்சியில் அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தலைமை தாங்கி, திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திப் பேசியதாவது:
''புதுச்சேரி திமுக நிலை பற்றி எப்போதும் இல்லாத வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரம் ஒதுக்கி கருத்துகளைக் கேட்டறிந்தார். தற்போது புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் காலாப்பட்டில் செயல் வீரர்கள் கூட்டத்தைக் கூட்ட உள்ளோம்.
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில்தான் கூட்டணி அமைய உள்ளது. திமுகவிடம் எந்தக் கட்சி வந்தாலும் திமுகதான் தலைமை தாங்கும். முன்பு திமுகவைப்பற்றி நினைக்காதவர்கள் கூட தற்போது நம்மிடம் பேசி வருகின்றனர்.
திமுகவுடன் கூட்டணிக்காக பல்வேறு கட்சியினர் தொடர்ந்து அண்ணா அறிவாலயக் கதவைத் தட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மக்களின் எண்ணப்படி திமுகவும் மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் நூறு சதவீதம் திமுக தலைமையிலான ஆட்சியே அமையும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதைத் தாண்டி, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குத்தான் ஆட்சி அதிகாரத்தில் முழு உரிமை இருக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு".
இவ்வாறு திமுக எம்எல்ஏ சிவா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT