Published : 15 Jan 2021 11:23 AM
Last Updated : 15 Jan 2021 11:23 AM
பட்டுக்கோட்டை அருகே பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், குடிசை வீட்டில் வசித்த தாய், மகள் ஆகிய இருவரும் மூச்சுத் திணறி பலியானார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வீரக்குறிச்சியைச் சேர்ந்தவர் வரப்பிரசாதம் (52). இவர் விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி மேரி (45). இவர்களுக்கு உதயா, விண்ணரசி, நிவேதா என மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் விண்ணரசிக்கு மட்டும் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.
வரப்பிரசாதம் தனது தம்பி அந்தோணிசாமியின் வீட்டருகே குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, வரப்பிரசாதம், அவருடைய மூத்த மகள் உதயா ஆகிய இருவரும் பக்கத்து வீட்டில் சென்று உறங்கியுள்ளனர். குடிசை வீட்டில் தாய் மேரி, மகள் நிவேதா ஆகியோர் உறங்கினர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில், மழையினால் ஊறிப் போயிருந்த அந்தோணிசாமியின் ஓட்டு வீட்டின், மண் சுவர் திடீரென இடிந்து, அருகில் இருந்த வரப்பிரசாதத்தின் நான்கு புறமும் கீற்றுகளால் வேயப்பட்ட குடிசை வீட்டில் விழுந்தது. இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மேரி, நிவேதா ஆகிய இருவரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புப் படையினர் உதவியுடன் இருவரது உடலையும் மீட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, உடற்கூறாய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT