Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM
திருவள்ளூர் மாவட்டம் 3,422 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. ஆவடிமாநகராட்சி, திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய 4 நகராட்சிகள், ஆரணி, திருமழிசை உள்ளிட்ட 10 பேரூராட்சிகள், ஆர்.கே.பேட்டை, சோழவரம் உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்கள் இதில் உள்ளன. 38 லட்சத்துக்கு மேற்பட்டோர் வசித்து வரும் இம்மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூரில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இம்மருத்துவமனையில், மருத்துவர்கள், ஊழியர்களின் தன்னலற்றமற்ற சேவையால் கடந்த 2020-ம் ஆண்டு 5,974 குழந்தைகள் நலமாக பிறந்துள்ளன.
இதுகுறித்து, ‘திருவள்ளூர் அரசுமருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி வத்சவ் தெரிவித்ததாவது:
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்து வருகிறது. ஆகவே, இங்கு வந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இம்மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரத்து 500 முதல் 2,000 வரையான புற நோயாளிகளும், 300 உள் நோயாளிகளும்சிகிச்சை பெற்று வருகின்றனர்.பிரசவத்துக்காக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆகவே, கடந்த 2020-ம் ஆண்டில் இம்மருத்துவமனையில் 5,974 குழந்தைகள் பிறந்துள்ளன. இது2019-ம் ஆண்டில் இங்கு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையைவிட 1,057 அதிகம். கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளில் 2,751 குழந்தைகள் சுகப் பிரசவத்திலும், 3,223குழந்தைகள் அறுவை சிகிச்சையாலும் பிறந்துள்ளன.
இங்கு கடந்த ஆண்டு பிறந்த மொத்த குழந்தைகளில், 32 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு பிறந்த குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடித்தட்டு மக்கள் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக்கொள்ள மருத்துவச் செலவுகள் பல ஆயிரங்கள் வரைஆகின்றன. இங்கு உதிரப் போக்குஉள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு எளிதாக பிரசவம் பார்க்க ஏதுவாக மத்திய, மாநில அரசுகள் நவீன வசதிகளுடன் உட்கட்டமைப்பு வசதிகளை செய்துள்ளன.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் உதவித் தொகை, மருத்துவ பொருட்கள் உள்ளடங்கிய பரிசு பெட்டகம், பிரசவத்துக்குப் பிறகான மருத்துவ உதவிகள் உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன. அத்திட்டங்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவமனை பணியாளர்களின் தன்னலமற்ற சேவை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு அதிக குழந்தைகள் பிறக்க முக்கிய காரணியாக அமைந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT