Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM
பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
வரும் 14-ம் தேதி மாவட்டச் செயலாளர் கூட்டத்தைக் கூட்டி, வேட்பாளர் பட்டியலை வெளியிட தேமுதிக தலைமை முடிவு செய்துள்ளது.
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, பாமக, மதிமுக, ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்து வருகிறது.
முதலில் எந்தக் கட்சிகளுக்கு எத்தனைத் தொகுதிகள் என்பதை முடிவு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. தேமுதிகவுக்கு 12, பாமகவுக்கு எட்டு, மதிமுகவுக்கு ஐந்து என்று முதல்கட்டப் பேச்சில் முடிவானது. ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு எந்தக் கட்சிகளும் ஒப்புதல் அளிக்கவில்லை.
கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று மதிமுக நிர்வாகிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். 10-க்கு குறைந்தால் சம்மதிக்க மாட்டோம் என்று பாமகவும் உறுதியாகத் தெரிவித்தது. இதேபோல், 14 தொகுதிகள் நிச்சயம் வேண்டும் என்று தேமுதிக குழுவினர் கூறினர்.
இதுதவிர ஐஜேகே மற்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவையும் தங்களுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கேட்டன. புதுவையை என்.ஆர். காங்கிரஸ் கேட்டது.
இதனால், அடுத்தடுத்து பேச்சு வார்த் தைகள் நடந்தன. பாமக ஏற்கெனவே 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் 6 தொகுதிகளை தேமுதிகவும் கேட்டுள்ளது.
இதில் இரு கட்சிகளும் பிடிவாதமாக இருந்ததால், பாஜக குழுவினர் முதலில் தேமுதிகவுக்கான தொகுதிகளை இறுதி செய்துள்ளனர். விழுப்புரம் தொகுதி மட்டும் பாமகவுக்கா, தேமுதிகவுக்கா என இன்னும் முடிவாகவில்லை. இதேபோல் புதுவையும் என்.ஆர்.காங்கிரஸுக்கா அல்லது பாமகவுக்கா என்பதும் இழுபறியில் உள்ளது.
பாஜக தரப்பில் எட்டு தொகுதிகள் நிச்சயம் தருவதாகக் கூறியுள்ள நிலையில், தொகுதிகளை முடிவு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டதால், கடந்த இரு தினங்களாக பாமக தரப்பில் பேச்சுவார்த்தைக்கு வராமல் ஒதுங்கியுள்ளனர். இதனால் கூட்டணியி லிருந்து பாமக வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி பாமக முக்கிய நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘எங்களுக்கு 2 தொகுதிகள்தான் பிரச்சினையாக உள் ளது. இதுவரை வெளியேறும் முடிவு எதையும் எடுக்கவில்லை’’ என்றனர்.
இதற்கிடையே, மதிமுகவுக்கு 7 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வரும் 14-ம் தேதி தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. அப்போது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரச்சாரத்தை தொடங்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.
மதிமுகவிலும் வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளது. தொகுதிப் பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதும், வரும் 13-ம் தேதி பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை வைகோ சந்திக்க உள்ளார். அதன்பின், வேட்பாளர் பட்டியலை வெளியிட மதிமுக முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT