Published : 13 Jan 2021 07:11 PM
Last Updated : 13 Jan 2021 07:11 PM

நீட் மதிப்பெண் வேறுபாட்டை எதிர்த்து வழக்கு: மாணவரைக் கல்லூரியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

நீட் மதிப்பெண் முதலில் 594 ஆகவும், 12 நாளில் 248 ஆகவும் இரு வேறாக தவறாக வெளியானதாக பாதிக்கப்பட்ட மாணவர் தொடர்ந்த வழக்கில், அவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். மாணவரின் தகவல் தவறாக இருந்தால் படிப்பைக் கைவிட வேண்டி இருக்கும், சட்ட விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டின் நீட் தேர்வு விடைத்தாள்களை தேசிய தேர்வு முகமை கடந்த அக்டோபர் 5-ம் தேதி வெளியிட்டபோது, கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் 700க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாகப் பதிவாகி இருந்தது. இந்நிலையில், அக்டோபர் 17-ம் தேதி 248 மதிப்பெண்கள் மட்டுமே அம்மாணவர் பெற்றதாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இரு பட்டியலையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்த மாணவர் மனோஜ், தனக்கு மதிப்பெண்கள் குறைத்து வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் சமர்ப்பித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் மதிப்பெண் பெற்றதாக மாணவர் தாக்கல் செய்த மதிப்பெண் சான்றின் ஸ்கிரீன் ஷாட் திரிக்கப்பட்டது என்றும், 248 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், உண்மையைக் கண்டறிய விசாரணை தேவை என்றும், தன் மீது தவறு இருந்தால் சட்ட பின்விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

கலந்தாய்வு அமைப்பு தரப்பில், மனுதாரருக்கு ஏற்கெனவே தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழக்கு நிலுவை காரணமாக சேர்க்கை வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரருக்கு மாணவர் சேர்க்கை வழங்க உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் சுதந்திரமான ஒரு அமைப்பைக் கொண்டு விசாரிப்பது குறித்து ஜனவரி 21-ம் தேதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, மனுதாரர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால் படிப்பைக் கைவிட வேண்டும் என்றும், அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டுமெனவும், மாணவர் மட்டுமல்லாமல் அவரது பெற்றோரும் சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டு, விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x