Published : 13 Jan 2021 05:41 PM
Last Updated : 13 Jan 2021 05:41 PM
தஞ்சாவூரில் ஒரு தனியார் பேருந்து, எதிரே வந்த லாரிக்கு வழிவிட ஒதுங்கியபோது தாழ்வாகத் தொங்கிய மின் கம்பியில் உரசியதில் 4 பயணிகள் பலியாகினர். இதுகுறித்து வெளியான ஊடகச் செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப் பள்ளியில் இருந்து, தஞ்சாவூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, வரகூர் அருகே எதிரில் வந்த லாரிக்கு வழிவிட, சாலையில் இருந்து கீழிறங்கியபோது, தாழ்வாகத் தொங்கிய மின்கம்பி மீது உரசி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணித்த கல்யாணராமன், கவுசல்யா, கணேசன், நடராஜன் ஆகிய நான்கு பேர் மின்சாரம் தாக்கிப் பலியாகினர். இந்தச் சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கும், தஞ்சாவூர் கண்காணிப்புப் பொறியாளருக்கும் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT