Published : 13 Jan 2021 04:27 PM
Last Updated : 13 Jan 2021 04:27 PM

யூடியூபில் ஆபாசக் காணொலி இருந்தால் நீக்கிவிட வேண்டும்; நாங்கள் கண்டுபிடித்தால் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை 

சென்னை

யூடியூப் சேனல் நடத்துபவர்கள் ஆபாசக் காணொலிகளைப் பதிவிட்டிருந்தால் தாமாக முன்வந்து அழித்துவிட வேண்டும். சைபர் க்ரைம் போலீஸ் கண்காணித்து வருகிறது. நாங்கள் கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

யூடியூப் சேனலை நடத்துபவர்கள், வருமானத்திற்காக ஆபாசத்தைக் கையில் எடுத்ததால் சைபர் போலீஸ் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர். ஆபாசமாகக் காட்சிகளை எடுத்த புகாரின் பேரில் சென்னை டாக் என்கிற யூடியூப் சேனலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

யூடியூப் சேனல்கள் தொடங்க கணினியும், இணையதள இணைப்பும் போதும் என்கிற நிலை இருப்பதால், புற்றீசல் போல யூடியூப் சேனல்கள் பெருகின. இதனால் பணம் பார்க்கும் போக்கில் எதையாவது போடுவது என்ற வரைமுறையின்றி எடுக்கப்பட்டு, ஆபாசமான காட்சிகளைப் பதிவிடுவது அதிகரித்து வருகிறது.

எலியட்ஸ் பீச் கடற்கரைப் பகுதியில் விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் பொழுதுபோக்கிற்காகவும், உடற்பயிற்சிக்காகவும் வரும் ஆண்கள் மற்றும் பெண்களிடம் பிராங்க் என்ற பெயரில் ஆபாசமாகப் பெண்களை நேர்காணல் செய்வது, மலினமான நகைச்சுவையைத் தூண்டிவிட்டு அவர்களை ஆபாசமாகப் பேசவைத்து அதை வீடியோவாகப் பதிவு செய்வது, அதை யூடியூப் சேனலில் போடுவது ஆகியவை தொடர்கதையாகி வருவதாகத் தொடர் புகார் சென்றதால் சாஸ்திரி நகர் போலீஸார் அங்கு சென்று கேமரா, மைக் சகிதமாக இருந்த 2 பேரைப் பிடித்தனர்.

இவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை போன்ற பொது இடங்களுக்குச் சென்று அங்கு வரும் காதலர்கள் மற்றும் இளம் பெண்களைக் குறிவைத்து கேளிக்கையாகப் பேசி, வீடியோ பதிவு செய்வதோடு, பெண்களை ஆபாசமாகக் காட்டும் வகையிலும் பதிவு செய்து பின்னர் அதில் ஆபாசமாக மற்றும் அநாகரிகமாகப் பேசும் வார்த்தைகளை மட்டும் எடிட் செய்து சென்னை டாக் யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்துள்ளனர்.

இந்த வகையில் சம்பந்தப்பட்ட யூடியூப் பக்கத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவு செய்துள்ளதும், அதை ஏழு கோடி பேர் இதுவரை பார்த்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து உரிமையாளர் உள்பட 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களைச் சிறையில் அடைத்தனர்.

இந்தத் தகவல் கிடைத்ததை அடுத்து இதேபோன்று ஆபாசக் காணொலிகளைத் தங்கள் பக்கத்தில் பதிவிட்டுப் பணம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் யூடியூப் சேனல்களின் காணொலிகளை பிரைவேட் பக்கத்திற்கு மாற்றிவிட்டனர். ஆனால், முழுவதும் அழிக்கவில்லை. பின்னர் பிரச்சினை தீர்ந்ததும் மீண்டும் அந்தக் காணொலிகள் பொதுவெளிக்கு பப்ளிஷ் செய்யப்படும்.

இதுதவிர போலீஸாருக்கு பல்வேறு ஆபாச யூடியூப் பக்கங்கள் குறித்தும் பலரும் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை காவல் ஆணையர் கவனத்திற்குக் கொண்டு சென்ற செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினர்.

அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், ''யூடியூப் பக்கங்களில் ஆபாசக் காணொலிகள் இருப்பதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு இதுவரை ஆபாசக் காணொலிகளைப் பதிவிட்டு சேனல் நடத்துபவர்கள் தாமாக முன்வந்து அவற்றை நீக்கிவிட வேண்டும்.

சைபர் பிரிவு போலீஸார் யூடியூப் பக்கங்களைக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டார்கள். இனியும் ஆபாசக் காணொலிகளைப் பேட்டி என்கிற பெயரில் கண்டபடி எடுத்துப் பதிவிடுவதோ, அல்லது ஏற்கெனவே பதிவிட்டு அதை நீக்காமல் வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்தாலோ அல்லது புகார் வந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x